பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார்.

பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்து நீக்கியதோடு அவர் வகித்து வரும் கொறடா பதவியைப் பறிக்க வேண்டும் என அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மூன்று பேர் நேற்று சபாநாயகரிடம் கடிதம் நேற்று வழங்கி இருந்தனர். அதேநேரம் சேலம் பாமக எம்எல்ஏ அருளும் தலைமைச் செயலகத்திற்கு வந்து தானே கொறடாவாக நீடிப்பதற்கான கடிதத்தை காண்பித்து செய்தியாளர்களை சந்தித்து பேசி இருந்தார்.

இந்நிலையில் பாமக கொறடா விவகாரம் மற்றும் உட்கட்சி பிரச்சனை விவகாரம் குறித்து பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி செய்தியாளர்களை சந்தித்து பேசவையில், ''ராமதாஸ் 45 ஆண்டுகள் சாதாரணமாக இல்லை பட்டிதொட்டியெல்லாம் சென்று சோறு தண்ணி இல்லாமல், தூக்கம் இல்லாமல் இந்த இயக்கத்தை வளர்த்தவர். அவர் இல்லை என்றால் இந்த இயக்கமே இல்லை. தமிழ்நாட்டில் பேசப்படுகின்ற தவிர்க்க முடியாத சக்தியாக ராமதாஸ் இருக்கிறார். ஆனால் இப்போது இருதரப்பிலிருந்து வருகின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது கட்சியில் எல்லோரும் குழம்பிப்போய் ரொம்ப வேதனையில் இருக்கிறோம்.

இது மாற வேண்டும். மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இருவரும் ஒரே இடத்தில் அமர்ந்து பேசி முடிவெடுக்காவிட்டால் இதில் தீர்வு ஏற்படாது. எல்லாம் பேசி பார்த்தாச்சு, சொல்லிப் பார்த்தாச்சு. பாமக கொறடா பிரச்சினை மிகப் பெரிய பிரச்சனையாக வராது. ஏனென்றால் இன்னும் ஓராண்டு கூட இல்ல சட்டப்பேரவை. எனவே அது ஒரு பெரிய பிரச்சினையாக வராது.

Advertisment

பொறுப்பில் போடுவது, நீக்குவது, இங்கு வருவது அங்கு போவது என மாறி மாறி நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு குழப்பத்தை தான் உண்டாக்குமே தவிர வளர்ச்சிக்கு அடிப்படை இருக்காது. இது ஒரு தீர்வாகவும் அமையாது'' என்றார்.