தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் நேற்று தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த கடலோர பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்திய எல்லையான கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் ஒரு நாட்டுப்படகு, 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 35 மீனவர்களையும் எல்லைத் தாண்டி பிடித்ததாகக் கூறி சிறைபிடித்துள்ளனர். மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்திற்கு பல அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், நமது அண்டை நாடான இலங்கையில் புதிய ஓர் ஆட்சி அமைந்த பிறகும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் நேற்று (3.11.2025) இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.

Advertisment

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.