கோப்புப்படம்
அரசுப் பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றும் ஆசிரியர்கள், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 181இன் படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திக் கடந்த 8ஆம் தேதி (08.01.2026) முதல் சென்னையில் பல்வேறு விதமான நூதன தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதோடு, தற்போதைய தொகுப்பூதியமான ரூ. 12 ஆயிரத்து 500இல் இருந்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதனையடுத்து பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ. 12 ஆயிரத்து 500இல் இருந்து உயர்த்தி மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தர்,
இருப்பினும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில், “அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பும் போது,பணி செய்த காலத்தை அடிப்படையாகக் கொண்டு பகுதி நேர ஆசிரியர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்” என அறிவித்தார். இந்நிலையில் கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதி நேர ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ கடந்த 17 நாட்களாகச் சென்னை டி.பி.ஐ.யில் நடைபெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் கொடுத்த உறுதியின்படி எங்களுக்குப் பாதகம் இல்லாத அரசாணை வரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மனநிறைவாக இல்லாதபோதும் எங்கள் ஆசிரியர்களின் உடல் நலனையும், பொருளாதாரத்தையும் பொருட்படுத்தாமல் வீரியமிக்க போராட்டத்தில் பங்கு கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் உணவு கொடுத்தவர்களுக்கும் உதவியாக இருந்த காவல்துறைக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பகுதி நேர ஆசிரியர்கள் கடந்த 13ஆம் தேதி (13.01.2026) பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பகுதி நேர ஆசிரியர்களை அங்கிருந்த காவல் துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வாகனம் மூலம் வானகரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்குக் கொண்டு சென்று அடைத்தனர். அச்சமயத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் என்பவர் திடீரென விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அப்போது இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி (14.01.2026) பரிதாபமாக உயிரிழந்தார். பகுதி நேர ஆசிரியர் கண்ணனின் உயிரிழப்பு சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us