Ethiopia volcano erupts after 10,000 years and india shrouded in darkness
10,000 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்ததால் இந்தியா இருள் சூழும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எத்தியோப்பியா நாட்டில் ஹேலி குப்பி எரிமலை ஒன்று உள்ளது. இந்த எரிமலை, கிட்டத்தட்ட 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் (23-11-25) வெடித்து சிதறியுள்ளது. இதில் இருந்து சிதறிய சாம்பல், 14 கி.மீ உயரம் வரை கக்கியிருந்தது. ஆகாயத்தை அழுக்காக்கிய சாம்பல், நேற்று காலை 5 மணியளவில் வானில் பரவி ஓமன், பாகிஸ்தான் என பல்வேறு நாடுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில், எரிமலையில் இருந்து வெடித்து சிதறிய சாம்பல் வடக்கு அரேபிய கடல் பகுதியை கடந்து, தற்போது 100-120 கிமீ வேகத்தில் இந்தியா வான்வெளியை நோக்கி நகர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில வான்வெளியை நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இரவு 10 மணிக்குள் இந்தியாவை அடையும் எரிமலை சாம்பலால் வானம் வழக்கத்தை விட இருண்டு காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிகழ்வின், தாக்கம் சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் மேகம் விரைவாக கிழக்கே நகர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள சில இடங்களில் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த எரிமலை சாம்பல் கண்ணாடி போல கூர்மையான சிலிகேட் துகள்களை கொண்டது என்பதால் விமானிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow Us