பாசமாக வளர்த்து வந்த பஞ்சவர்ண கிளி வீட்டில் இருந்து வெளியே பறந்து சென்ற நிலையில் கிளியை பிடிக்க முயன்ற நபர் உயிரிழந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கிரிநகர் பகுதியில் வசித்து வந்தவர் அருண்குமார். செல்லப்பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் கொண்ட அருண்குமார் சுமார் இரண்டரை லட்சம் ரூபாயில் பஞ்சவர்ண கிளி ஒன்றை பாசமாக வளர்த்து வந்துள்ளார். தினமும் கிளிக்கு உணவளித்துவிட்டு வேலை சென்று வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்து எதிர்பாராத விதமாக வெளியே பறந்து சென்ற கிளியானது அந்த பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் உச்சியில் அமர்ந்தது.

Advertisment

தப்பி வெளியே பறந்து ஓடிய பஞ்சவர்ண கிளியை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் மின்னழுத்த கோபுரத்தின் மீது கிளி அமர்ந்திருந்தது அருண்குமாருக்கு தெரியவந்தது. கிளியை மீட்க பல்வேறு முயற்சி எடுத்தும் பலனளிக்காததால் வீட்டின் சுவர் மீது ஏறி பெரிய ஸ்டீல் பைப்பை பயன்படுத்தி கிளியை மீட்க முயன்றபோது  தவறுதலாக மின்கம்பி மீது உரசியதில்  மின்சாரம் பாய்ந்து அருண்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.