ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரை ஜவுளி சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து வந்து ஜவுளியை கொள்முதல் செய்கின்றனர். மேலும் பொதுமக்களும் வந்து ஆர்வமாக தங்களுக்கு பிடித்த ஆடைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் மும்முரமாக நடைபெறும்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஜவுளி வாரச்சந்தை கூடியது. தற்போது நூலின் விலை திடீரென அதிகரித்ததால் துணிகளின் விலை உயர்ந்தது. இதன் எதிரொலியாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை களை இழந்து வெறிச்சோடியது. சில்லறை விற்பனை பெயரளவில் மட்டுமே நடைபெற்றது. மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, தற்போது நூல்கள் விலை திடீரென அதிகரித்துள்ளதால் துணிகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் உள்ளூர் வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் வரவில்லை. வியாபாரமும் மந்த நிலையில் நடைபெற்றது. மொத்த வியாபாரம் பத்து சதவீதமும், சில்லறை விற்பனை 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. அடுத்து ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/24/918-2026-02-24-20-55-25.jpg)