erode tasmac incident- police investigation Photograph: (erode)
பெற்ற தந்தையை மகனே மதுபோதையில் கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த கொம்பனை கிராமத்தைச் சேர்ந்தவர் லிங்கப்பன் (68). கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களும் திருமணத்துக்கு பிறகு தனித்தனியாக வசித்து வந்தனர். லிங்கப்பனின் மூத்த மகனான பொன்னுச்சாமி (42) என்பவர் திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து கடந்த சில நாட்களாகவே தந்தை லிங்கப்பன் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் பொன்னுசாமி சரிவர வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தந்தை லிங்கப்பனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவும் வழக்கம் போல் பொன்னுச்சாமி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தை லிங்கப்பனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். போதையில் இருந்த பொன்னுசாமி ஆத்திரமடைந்து தந்தை என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்தார். இதில் லிங்கப்பன் பரிதாபமாக இறந்தார்.பின்னர் மதுபோதையில் பொன்னுச்சாமி தந்தை உடல் அருகே படுத்து தூங்கி விட்டார். இன்று அதிகாலை பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் லிங்கப்பன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லிங்கப்பன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகே பொன்னுச்சாமி படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வெள்ளோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லிங்கப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் பொன்னுசாமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் தந்தையை கழுத்தை நெரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இதனை அடுத்து பொன்னுசாமியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி இருக்கின்றனர். குடிபோதையில் தந்தையை மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.