கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் வருகிற 16 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ளத்  திட்டமிட்டிருந்தார். அதனால், இந்த பரப்புரைக்கு அனுமதி கோரி அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் மனு கடந்த 7ஆம் தேதி அளித்திருந்தார்.

Advertisment

இதனிடையே, காவல்துறை சார்பில் 84 விதிகள் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை பூர்த்தி செய்வதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கூறி 16ஆம் தேதி நடத்த வேண்டிய பரப்புரை, 18ஆம் தேதியன்று நடத்த காவல்துறையிடம் செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், ஈரோட்டில் 18ஆம் தேதி தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு ஈரோடு மாவட்ட எஸ்.பி அனுமதி அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள டோல்கேட் பகுதியில் விஜய், மக்கள் சந்திப்பு நடத்த செங்கோட்டையன் அனுமதி கேட்டிருந்தார். ஆனால், மக்கள் சந்திப்பு நடைபெறும் இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா இன்று (14-12-25) நேரில் ஆய்வு செய்தார். விஜய் பேசும் இடம், தொண்டர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை இன்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்புக்கு மாவட்ட கண்காணிப்பாளர் சுஜாதா அனுமதி வழங்கியுள்ளார். அதே சமயம், ரூ.50,000 வாடகையுடன் அந்த இடத்தை பயன்படுத்த இந்து சமய அறநிலையத்துறையும் வழங்கியுள்ளது. 

Advertisment