Erode Court orders Seeman must appear in person at march 9
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்த தொகுதிக்குக் கடந்தாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி. சீதாலட்சுமி என 46 பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில், 1,17,158 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெற்றார். வரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,872 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்தார்.
இந்த தேர்தல் பரப்புரையின் போது சீதாலட்சுமியை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பன்னீர்செல்வம் பூங்கா, மரப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி அதிக ஆட்களை கூட்டுவது, நேரம் தவறி பேசுவது, பெருமுனை கூட்டத்திற்கு அனுமதி பெற்று பொதுக்கூட்டம் நடத்துவது உள்ளிட்ட 6 வழக்குகள் சீமான் மீது போலீசார் பதிவு செய்தனர். அதில் குறிப்பாக தெற்கு காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், நகர காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் பதியப்பட்டன.
இந்த வழக்கு விசாரணை ஈரோடு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோர் இன்று (07-01-25) நேரில் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீண்டும் மார்ச் 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
Follow Us