ஈரோடு, திண்டல், அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் அடிவாரத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், 100 பக்தர்களை அறுபடை வீடுகளுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள அழைத்துச் செல்லும் வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி துவக்கி வைத்தார்.

Advertisment

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறையும் சுற்றுலாத் துறையும் இணைந்து, ஏழை, எளிய மக்கள், முதியோர்களை ஆன்மீகத் தலங்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களுக்கு பயனாளிகள் ஆன்மீகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், மானசரோவர் கோயிலுக்கு பயணம் செல்பவர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் 60 முதல் 70 வயதிற்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ. 2 இலட்சத்திற்கு கீழ் உள்ள 100 பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, 13.10.2025 முதல் 16.10.2025 வரை 4 நாட்கள் பயணமாக, பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பழமுதிர்சோலை அருள்மிகு சோலைமலை முருகன் திருக்கோயில், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் என அறுபடை வீடுகளுக்கு 3 பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லும் ஆன்மீகப் பயணம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக, சுற்றுலாத் தலங்களை வளர்ச்சி செய்வதற்கும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.