Advertisment

இந்து முன்னணி பயிற்சி முகாம் அரங்கில் இருந்த டூவீலர்களுக்கு தீ வைப்பு!

ed-2-wheeler-hindu

ஈரோடு சின்ன சடையம்பாளையம் பகுதியில் இந்து முன்னணி பயிற்சி முகாம் நடத்தக்கூடிய விநாயகர் அரங்கம் உள்ளது. இங்கு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று வந்தன. இந்த இடத்தின் உரிமையாளரும், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினருமான சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளை இந்த அரங்கம் முன்பு நேற்று (25.12.2025) இரவு வழக்கம் போல் நிறுத்தி உள்ளார். மேலும் அவரது உறவினர் சதீஷின் மோட்டார் சைக்கிளும் அரங்கத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணியளவில் திடீரென அந்த இரண்டு மோட்டார் சைக்கிளும் தீப்பிடித்து எரிந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நிர்வாகிகள் மோட்டார் சைக்கிள் மீது எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். எனினும் இரண்டு மோட்டார் சைக்கிளும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தீப்பிடித்து இருந்த மோட்டார் சைக்கிள் அருகே பெட்ரோல் பாட்டில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 

Advertisment

எனவே நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் பெட்ரோலை பாட்டில் மூலம் நிரப்பி அங்கு வந்து மோட்டார் சைக்கிளில் ஊற்றி தீ வைத்திருப்பது தெரிய வந்தது. இன்று (26.12.2025) காலை ஏ.டி.எஸ்.பி விவேகானந்தன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கார்த்தி கூறும் போது, “ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன்பு சின்ன சடையம்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 17 இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சேதப்படுத்தினர். 

ed-2-wheeler-hindu-police-inves

தற்போது அதேபோன்று இரண்டு மோட்டார் சைக்கிளையும் மர்மகும்பல்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி உள்ளனர். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் திரண்டு உள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே கலவர சூழலை உருவாக்க இந்து அமைப்பை சேர்ந்த சிலரே இக் குற்ற செயலை செய்திருக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவி வருவதால் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

Erode HINDU MUNNANI Police investigation two wheelers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe