அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (01.09.2025) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கக் கூடிய டி.ஜி.பி. கடந்த 31ஆம் தேதி ஓய்வு பெற்று விட்டார். அவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதத்திற்கு முன்பாகவே அந்த பதவிக்குத் தகுதி வாய்ந்த டிஜிபிக்கள் அடங்கிய பட்டியலை யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அதில் 3 பேரைத் தேர்ந்தெடுத்து மாநில அரசுக்கு அனுப்பி வைப்பர். அதில் ஒருவரை மாநில அரசு டிஜிபியாக நியமிக்க வேண்டும்.
தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கக் கூடிய பொறுப்பு டிஜிபிக்கு இருக்கிறது. அது தான் காவல் துறையில் மிக உயர்ந்த பதவி ஆகும். அந்த பதவிக்குக் கூட சரியானவர்களை உரிய நேரத்தில் நியமிக்க முடியாத ஒரு அரசாங்கம் திமுக அரசாங்கம். புதிதாக டிஜிபி பதவி ஏற்றுள்ளார். தகுதியின் அடிப்படையில் அவர் நியமிக்கவில்லை. 8 மூத்த டிஜிபிக்கு பிறகு 9வது டிஜிபியாக உள்ள அவர் பொறுப்பு டிஜிபியாக நியமித்திருக்கிறார்கள். ஏற்கனவே தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்திலே மக்களுக்குப் பாதுகாப்பு கிடையாது. சிறுமி முதல் முதியோர் வரை பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலை நிலவிக் கொண்டிருக்கின்றது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் குறித்த காலத்தில் டிஜிபியை நியமிக்கப்பட வேண்டும். டிஜிபி ஓய்வு பெறுகின்ற நாள் அரசுக்குத் தெரியும். அப்படி இருந்தும் இந்த அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக டிஜிபி நியமனத்திலே சரியாக நடந்து கொள்ளவில்லை. அதனால் நேற்றைய தினம் பொறுப்பு டிஜிபி பதவி ஏற்கின்ற போது இவருக்கு முன்பு (SENIOR RANK) உள்ள 8 டிஜிபிகள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. இந்த 8 டிஜிபிகள் தான் பல துறைகள் நிர்வகித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு டிஜிபிக்கும் ஒரு பகுதி பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். பொருளாதார குற்ற்றப்பிரிவுக்கு என ஒரு டிஜிபி, அதேபோன்று தீயணைப்புத்துறை டிஜிபி என உள்ளனர். இவர்களில் 8 டிஜிபிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறவில்லை. உயர்ந்த பதவி வகிக்கிற டிஜிபிக்கு கூட குறித்த நேரத்தில் குறித்த காலத்தில் நியமனம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. முறையாகத் தகுதி வாய்ந்த டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தும் கூட திமுக அரசாங்கம் அதற்கு உண்டான நடவடிக்கையை எடுக்கவில்லை” எனப் பேசினார்.