கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதிய விவசாயி ராஜேந்திரன், இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் வந்த மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக எரிக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை உறைய வைத்துள்ளது.

Advertisment

உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடியே அவர் சாலையில் ஓடிய காட்சி, இந்த திமுக ஆட்சியில் சட்டம்–ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கான பயங்கர சாட்சி. தினந்தோறும் “இன்னும் என்ன கொடுமை நடக்கப் போகிறதோ?” என்ற அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.“இதற்கும் மேலாக சட்டம்–ஒழுங்கு சீர்கெட முடியாது” என்று நினைக்கும் ஒவ்வொரு தருணத்திலும், அதைவிடக் கொடூரமான சம்பவங்களை இந்த திமுக ஆட்சியில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

Advertisment

தீயில் எரிந்தது விவசாயி ராஜேந்திரன் மட்டும் அல்ல, தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு அனைத்தும் தான். இந்த கொடூர கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, நியாயமான, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும்,பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க இந்த திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.