Advertisment

“முதல்வருக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்...” - இ.பி.எஸ். கடும் கண்டனம்!

mgr-eps-mks

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறைந்தும் மறையாமலும், கோடானு கோடி தமிழ் மக்களின் இதயங்களில் தெய்வமாக வாழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க.வினருக்கு எம்.ஜி.ஆர். மீது ஏற்பட்ட வெறுப்புணர்வு இன்றுவரை மறையவில்லை என்பது, தற்போதும் தி.மு.க.வினரது செயல்கள் மூலம் வெளிப்பட்டு வருகிறது.

Advertisment

எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது. 1981ஆம் ஆண்டு தமிழுக்கென்று தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் நிறுவினார். அந்த பல்கலைக்கழகம் இன்றுவரை பல தமிழ் அறிஞர்களை உருவாக்கி பெரும்பேறு பெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நோக்கு, போக்கு, செயல் பகுதிகள் உள்ளன. 1981ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் இந்த பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது என்று உள்ளதே தவிர, அதைத் தோற்றுவித்த எம்.ஜி.ஆர். பெயர் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், அந்த இணையதளத்தில் உள்ள போட்டோ கேலரியில் இருந்த எம்.ஜி.ஆரின் படமும் நீக்கப்பட்டுள்ளதாம். 

Advertisment

முதல்வர் மு.க. ஸ்டாலின், எம்.ஜி.ஆர். பெயரை, அவர் துவக்கிய தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கியிருப்பது, முதல்வர் மு.க. ஸ்டாலினின் மமதையின் உச்சத்தைக் காட்டுகிறது. 'சீப்பை ஒளித்து வைத்துவிட்டால், கல்யாணத்தை நிறுத்திவிடலாம்" என்று நினைப்பதுபோல், தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் இருந்து எம்.ஜி.ஆர். படத்தை நீக்கிவிட்டால், எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிடலாம் என்று நினைப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். வாழ்நாள் எல்லாம் தமிழக மக்களின் நலனுக்காகவே உழைத்து, தான் பாடுபட்டு சேர்த்த செல்வங்களையெல்லாம் மக்களுக்கே விட்டுச் சென்ற எம்.ஜி.ஆருக்கு. மக்களே கோவில் கட்டி வழிபடுகிறார்கள்.

mgr

எம்.ஜி.ஆரின் புகழை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்பது நிதர்சனம். இதுபோன்ற வன்மத்தை கைவிட்டுவிட்டு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இணையத்தில் எம்.ஜி.ஆர். படத்தை உடனடியாக பதிவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். எம்.ஜி.ஆர். புகழை அழிக்க நினைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

admk Edappadi K Palaniswamy M.G.R. mk stalin tamil university Thanjavur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe