சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22ஆவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (06.01.2026) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “15 வயது முதல் 29 வயது வரை இருக்கக்கூடிய இளைய சமுதாயத்தினரிடம் 4 கருத்துகளை கேட்கப்போகிறோம். அதில் குறுகிய காலத்தில் ( short term-ஆக) இரண்டை முதலில் செய்யுங்கள். இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறோம். எங்களுடைய கனவாகப் பார்க்கிறோம்.

Advertisment

இன்னும் 2 கனவுகளை 2030க்குள் செய்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு அந்த இளைய சமுதாயத்திடமிருந்து இதை நாங்கள் பெற இருக்கிறோம். இந்த திட்டத்தை 9ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும். 9ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை 30 நாட்கள் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று பார்க்கக்கூடிய அளவிற்கு அதிகாரிகள், தன்னார்வலர்களை தயார்படுத்தி வைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், நாள்தோறும் ஒரு திட்டத்தை அறிவித்து மக்களை ஏமாற்றுவதை ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள். நேற்றைய தினம் 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்று ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். நான்கரை ஆண்டுகள் மக்களின் அடிப்படை தேவையை கூட நிறைவேற்றாமல், ஆட்சி முடியும் நேரத்தில், 50 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு வீடு வீடாகச் சென்று உங்கள் கனவை சொல்லுங்கள் என்று கேட்கப் போகிறார்களாம்.

uks-scheme

ஆட்சியில் இருக்கும்போது, மக்களை பற்றி கவலைப்படாமல், ஆட்சி முடியும் நேரத்தில் மக்களின் கனவைக் கேட்டு அவர்களின் குறையை தீர்க்கப் போகிறேன் என்பது கடைந்தெடுத்த கபட வேலை. இந்த திட்டம் முதலமைச்சரின், திமுகவின் தேர்தல் வேலையை பார்க்கும் நிறுவனத்திடம் மறைமுகமாக ஒப்படைக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. அரசின் பணத்தில், தன்னார்வலர்கள் என்ற முகமுடி அணிந்து கொண்டு திமுகவிற்கு வேலை பார்ப்போர், வீடு வீடாகச் சென்று திமுகவிற்கு வாக்கு சேகரிக்க நடத்தும் ஒரு மோசடி நாடகம்தான் இது.

Advertisment

இதற்கு மக்களின் பணத்தை விரயம் செய்கிறார்கள். இப்படி நிர்வாகம் செய்வதைவிட, அரசு நிர்வாகத்தையே நேரடியாக தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துவிடலாம். மேலும், மக்களின் ஆதார் எண், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அரசின் வாயிலாக திமுகவின் தேர்தல் ஆதாயத்திற்காக சேகரிக்க நினைப்பது டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை மீறுவது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை தார்மீக அடிப்படையில் மீறும் செயலாகும். அரசின் நிதியை இதுபோன்ற தில்லு முல்லு திட்டங்களுக்காக செலவிட்டு, சுய விளம்பரம் தேடும் திமுக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மக்களை ஏமாற்றும் இது போன்ற காதில் பூ சுற்றும் வேலையை இனியாவது திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.