அதிமுக சார்பில் சென்னை வடபழனியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொது கூட்டம் இன்று (15.09.2025) நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், “ஆட்சி செய்கின்ற பொழுதும் சரி. இப்பொழுதும் சரி. மத்தியிலே இருக்கின்றவர்கள் யாரும் நமக்கு எந்த அச்சுறுத்தலும் கொடுக்கவில்லை. நமக்கு நன்மைதான் செய்தார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சில பேர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள்.
அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். மத்தியில் இருக்கின்றவர்கள் தான் நமக்கு காப்பாற்றி கொடுத்தார்கள். நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ஐயன் வள்ளுவன் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அப்படி நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி இவரை அனுசரிக்கவில்லை. அவரை அனுசரிக்கவில்லை என்று கூறுகிறார்கள். யார் உழைக்கிறார்களோ அவரைத்தான் அனுசரிப்போம் . வெட்டிப் பேச்சு பேசிட்டு இருக்க எல்லாம் இங்கே இடமில்லை. உழைக்கின்றவர்களுக்குத்தான் இடம். சட்டமன்றத்தில் ஜெயலலிதா தெளிவாக அற்புதமாகப் பேசினார்கள் பேசினார்கள்.
எனக்கு பின்னால் நூறு ஆண்டு காலம் அதிமுக தொடரும். சில பேர் அதிமுகவை அடமானம் வைக்க பார்க்கிறார்கள். அதிலிருந்து அதிமுகவை காப்பாற்ற அத்தனை பேரும் நாம் துணிந்து நிற்க வேண்டும். நிற்பீர்களா? . இப்பொழுதும் சொல்கின்றேன். அதிமுகவிற்கு எவர் ஒருவர் துரோகம் செய்தாலும் அவர் நடு ரோட்டிலே நிற்பார். விலாசம் இல்லாமல் போய்விடுவார். இந்த இயக்கம் உயிரோட்டம் உள்ள இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு பெரும் சக்திகள் கொண்ட இயக்கம். இது இறைவனால் படைக்கப்பட்ட இயக்கம். இது ஏழைகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். குடும்பத்துக்காக அல்ல இந்த அரசாங்கம். யார் வேண்டுமானாலும் அதிமுக கட்சியிலே உயர்ந்த இடத்துக்கு வர முடியும்” எனப் பேசினார்.