Advertisment

“இதற்கு இ.பி.எஸ். பெருமைப்படக் கூடாது, வெட்கப்படத்தான் வேண்டும்” - பட்டியலிட்ட அமைச்சர்!

minister-ragupathy-dmk-our-image

சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. 2 ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த பழனிசாமி, 'அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள்’ எனப் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?. அரித்மெட்டிக் கணக்கு போட்டு, பாஸ் பெருசா ஃபெயில் பெருசா என செந்தில் காமெடி போலப் பேசியிருக்கிறார் பழனிசாமி என தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.  

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், “10 தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கும் தோல்விசாமி, ‘210 தொகுதிகளில் அதிமுக வெல்லும்’ என அதிமுக பொதுக்குழுவில் கிச்சு மூச்சு மூட்டியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர். குழந்தைகளைச் சிரிக்க வைப்பதற்காகக் கிச்சு மூச்சு மூட்டுவது போல அதிமுகவினருக்கு உற்சாக மூட்டச் சிரிக்காமல் பொய்யை சொல்லியிருக்கிறார் பழனிசாமி. திமுக நம் ஆட்சியைப் பற்றி விமர்சிக்க முடியவில்லை. அதிமுக பாஜகவோடு கூட்டணி என்றுதான் சொல்கிறார். அப்படியான சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் என தன்னுடைய ஆட்சிக்குத் தானே பொதுக்குழுவில் சான்றிதழ் கொடுத்திருக்கிறார் பழனிசாமி. 

Advertisment

ஆட்சிக்கு ஆபத்தைத் தடுக்கத் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள், விவசாயிகள் மீது அடக்குமுறை, கொடநாடு கொலைகள், போலீஸ் அதிகாரி விஷ்ணு பிரியா தற்கொலை, கனிமக் கொள்ளைகள், கஜா, ஓகி புயல்களில் காட்டிய மெத்தனம், கூவத்தூர் கூத்துகள், கொரோனா மரணங்கள், கொரோனா பேரிடரிலும் கொள்ளை, சாத்தான்குளம் தந்தை மகன் லாக் அப் டெத், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கல்லூரி மாணவிகளைத் தவறான வழிக்குத் தூண்டிய பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம், பொள்ளாச்சி பாலியல் வன்முறைகள், நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் சுவாதி கொலை, அதிமுக பேனர் மரணங்கள், ஜல்லிக்கட்டு தடை போராட்டம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் என எத்தனை எத்தனை கொடுமைகள் நடைபெற்றன.

admk-meeting-general-body-eps-speaking

இதையெல்லாம் மறைத்துவிட்டு, சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம் எனச் சோற்றுக்குள் பூசனிக்காயை மறைத்திருக்கிறார் பழனிசாமி. பழனிசாமி சொல்வது போலவே அது சிறப்பான ஆட்சி என்றால், 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை மக்கள் ஏன் வீட்டுக்கு அனுப்பினார்கள்?. தமிழ்நாட்டின் வளர்ச்சியை முடக்கி தமிழ்நாட்டைக் கற்காலத்திற்கு இழுத்துச் சென்ற ஆட்சிதான் பழனிசாமியின் ஆட்சி. அது பொற்கால ஆட்சி அல்ல. தமிழ்நாட்டின் இருண்டகால ஆட்சி. மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் டெல்லியின் காலடியில் அடமானம் வைத்து விட்டு, நமது பொருளாதார வளத்தைச் சுரண்டும் திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் தலையாட்டி கையெழுத்திட்டு துரோகம் செய்ததுதான் பழனிசாமியின் துரோக ஆட்சி.

தமிழ்நாட்டின் உரிமைகளை மறுத்தும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டியும், வளர்ச்சித் திட்டங்களை முடக்கியும், தமிழர் பண்பாட்டை உலகறிய செய்யும் கீழடி அகழாய்வு முடிவை மறுத்ததும் மட்டுமின்றி தமிழர்களை திருடர்கள் என்றும் கொடுமைக்காரர்கள் என்றும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக ஒடிசா, பீகார் தேர்தல் போது விமர்சித்துப் பேசிய பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டு இருப்பதற்கு பழனிசாமி பெருமைப்படக் கூடாது. வெட்கப்படதான் வேண்டும். அதேபோல மகளிர் விடியல் பேருந்தில் நமது பெண்கள் பயணிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் லிபஸ்டிக் பஸ் என பெண்களை அவமதிக்கும் வகையில் அநாகரீகமாக நடந்து கொண்ட பழனிசாமி இன்று பெண்களின் நலத்திட்டங்களுக்காக குரல் கொடுத்தேன் என நாடகமாடி உள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு கொடுக்கப்பட்டு வரும் உரிமை தொகை, விடியல் பயணம், புதுமை பெண் போன்ற திட்டங்களைக் கண்டு தாங்கி கொள்ள முடியாத முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம் பொண்டாட்டியையும் இலவசமாக கொடுப்பார்கள் என சொல்லி ஒட்டு மொத்த தமிழ்நாட்டு பெண்களையும் கொச்சைப்படுத்தி பேசினாரே அதை பெயரளவுக்காவது கண்டித்தாரா பழனிசாமி.? 

eps-amitsh-car

இந்த லட்சணத்தில் பெண்களுக்கு ஆதரவாக அதிமுக இருப்பது போல பகல் வேஷம் போடுகிறார் பழனிசாமி. மேலும், அரைத்த மாவை அரைப்பது போல் பேசிய பொய்களையே பொதுக்குழுவிலும் திரும்பப் பேசியிருக்கிறார் பழனிசாமி. கூவத்தூரில் குறுக்கு வழியில் முதலமைச்சராக ஊர்ந்தெடுக்கப்பட்ட பழனிசாமியால் தமிழ்நாடு அனைத்துத் துறைகளில் படுபாதாளத்திற்குச் சென்றது. தொட்டத் துறைதோறும் ஊழல், கொடநாடு தொடங்கி தூத்துக்குடி வரை சீரழிந்து கிடந்த சட்டம் ஒழுங்கு, பாஜகவின் கண்ணசைவிற்கு இசைந்து நடந்து தமிழ்நாட்டின் உரிமைகள் தாரை வார்ப்பு, அடிமை அதிமுக ஆட்சியின் அவலட்சணங்களை எதிர்த்துப் போராடியவர்கள் மீது குண்டர் சட்டம் முதல் துப்பாக்கிச் சூடு வரை நடத்தி அடக்கு முறை, செய்தி நிறுவனங்கள் மீது அவதூறு வழக்குகள் எனத் தமிழ்நாட்டைச் சீரழித்த பழனிசாமியை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிடவில்லை. அதனால்தான் மக்கள் தொடர்ந்து 10 தேர்தல்களில் அவரை தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள். 

தமிழ்நாட்டைத் தலை நிமிர வைத்திருக்கும் திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பொறுக்க முடியாமல் பொதுக்குழுக் கூட்டம் கூட்டிப் பொருமியிருக்கிறார். பழனிசாமியின் அர்த்தமற்ற அவதூறுகளால் திமுகவை அசைத்துக் கூட பார்க்க முடியாது. இனியும் இந்தப் பொய்கள் மக்களிடம் எடுபடும் என நினைத்து பகல் கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். நாட்டு மக்களுக்காகச் சூழ்நிலை கருதி பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தோம். பா.ஜ.க-வுடன் இனி கூட்டணி இல்லை’’ என்று 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சி மாநாட்டில் வீர வசனம் பேசிய பழனிசாமி, மீண்டும்  பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதற்கு நியாயம் கற்பிக்கப் பொதுக்குழுவில் புலம்புவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

ed

அடுத்த 100 நாட்களில் திமுக அமைச்சர்கள் பத்திரமான இடத்துக்குப் போவார்கள் என ஜோதிடம் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. தன்னுடைய உறவினர்கள் வீட்டில் நடந்த 2 ரெய்டுகளுக்குப் பயந்து போய் அதிமுகவை அமித்ஷாவிடம் பத்திரமாக அடமானம் வைத்த பழனிசாமி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?. 2019 எம்பி தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதியில் ஒன்றில்தான் வென்றோம், அப்போது நடந்த 22 சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றோம் என புள்ளிவிவரம் சொல்கிறார் பழனிசாமி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-களால் ஆட்சிக்கு ஆபத்து என்றதும் அவர்களைத் தகுதிநீக்கம் செய்தார்கள். அந்தத் தொகுதிகளுக்கும் சேர்த்து அப்போது இடைத் தேர்தல் நடைபெற்றது. அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிடுவோமோ, ஆட்சி கவிழ்ந்துவிடுவோமோ என அஞ்சி அந்த 9 தொகுதிகளில் மட்டுமே குறியாக வேலை பார்த்து வென்றார்கள். 

நான் ஏழாவது பாஸ்னே. நீங்க எஸ்.எஸ்.எல்.சி ஃபெயிலுனே. பாஸ் பெருசா ஃபெயில் பெருசா என செந்தில் காமெடி போலப் பேசியிருக்கிறார் பழனிசாமி. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளை திமுகதான் வென்றது. ஆனால், நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் 10 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவே அதிக வாக்குகள் பெற்றது. அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வாங்கிய வாக்குகள் இரண்டையும் சேர்த்தால் 41.33 சதவிகிதம். எனவே, வருகிற தேர்தலில் 210 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்லும் என அரித்மெட்டிக் கணக்கு போட்டிருக்கிறார் பழனிசாமி.

admk-meeting-general-boady

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, அதிமுக தனித் தனியாகக் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, பன்னீர்செல்வம். தமாகா, புதிய நீதிக் கட்சி, ஐ.ஜே.கே, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இடம்பெற்றன. இப்போது அதிமுக கூட்டணியில் பாஜக, தமாகா தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன?. அன்றைக்கு அதிமுக கூட்டணியில் இருந்த எஸ்.டி.பி.ஐ. விலகிவிட்டது. தேமுதிகவின் நிலை உறுதியாகவில்லை. அதுமட்டுமின்றி 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வோடு கூட்டு சேர்ந்து அதிமுக நின்றிருந்தாலும் திமுக கூட்டணியை வென்றிருக்க முடியாது. இனியும் வெல்ல முடியாது என்பது தமிழ்நாட்டில் நேற்று பிறந்த பிஞ்சுக் குழந்தைக்குக் கூட தெரியும். நிலைமை இப்படியிருக்க நீங்கள் அடித்து விடும் பொய்க்கணக்கை அதிமுக வினரே நம்பமாட்டார்கள் பழனிசாமி” எனத் தெரிவித்துள்ளார். 

dmk admk edappadi k palaniswami general body meeting minister ragupathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe