ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள சேரங்கோட்டை என்ற பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் அப்பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இத்தகைய சூழலில் தான் அதே பகுதியைச் சேர்ந்த முனியராஜ் என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களாக இந்த மாணவியை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதே சமயம் அந்த மாணவி, இளைஞரின் காதலை ஏற்க மறுத்ததுடன், தன்னை பின்தொடர்ந்து வர வேண்டாம் என்றும் கூறியுள்ளார். 

Advertisment

இந்நிலையில் இன்று (19.11.2025) வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த மாணவியை பின் தொடர்ந்து சென்ற முனியராஜ் தனது காதலை ஏற்க வற்புறுத்தியுள்ளார். இதனை அந்த மாணவி ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியைச் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

Advertisment

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முனியராஜை ராமேஸ்வரம் நகர போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க  மறுத்து மாணவியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. கைது செய்யப்பட்ட முனிராஜை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் முழக்கமிட்டனர். ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

eps-mic-2

அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ராமேஸ்வரத்தில் தன்னை காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவியை இளைஞர் கத்தியால் குத்திப் படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவிக்குக் கூட பாதுகாப்பு இல்லாத ஒரு அவல நிலைக்கு யார் பொறுப்பு?. 

Advertisment

பட்டப்பகலில் பள்ளி மாணவியைக் கொலை செய்யும் அளவிற்கு, குற்றவாளிக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?. திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கையும் பெண்கள் பாதுகாப்பையும் முழுமையாக குழி தோண்டி புதைத்துவிட்டதே இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களுக்கு முழுமுதற் காரணம். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே - ‘உங்கள் ஆட்சியில் அடுத்த நிமிடம் பாதுகாப்பாக இருக்க முடியுமா?’ என்ற அச்சத்துடனே ஒவ்வொரு பொழுதையும் பெண்கள் கடக்க வேண்டிய அவலச் சூழல், தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு இல்லையா?. 

cm-mks-sad

இதற்கு நீங்கள் வெட்கித் தலைகுனிய வேண்டாமா?. பெண்ணியம் போற்றும் தமிழகத்தை, பெண்கள் பாதுகாப்பாக நடமாடவே முடியாத மாநிலமாக மாற்றிவிட்டீர்களே. இது உங்களை உறுத்தவில்லையா?. ராமேஸ்வரம் பள்ளி மாணவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு உச்சபட்ச சட்டப்பூர்வ தண்டனை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்