Advertisment

“கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்?” - இ.பி.எஸ். கேள்வி!

eps-rally-dpi-1

தர்மபுரி  நகராட்சி அலுவலகம் அருகே மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்  தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே இ.பி.எஸ். இன்று (02.10.2025) பேசுகையில்,“கரூர் கூட்ட நெரில் சம்வத்தில் இவ்வளவு பிரச்னை ஏற்பட்ட பிறகும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே நீங்கள் திருந்தவில்லை. கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணியைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். தலை சாய்ந்து செல்கிறார்கள். இப்படி தமிழர்கள் தலை குனிந்த காட்சிகளைக் கண்டு அனைவரும் பதறிப்போயிருக்கிறார்கள். இதற்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வர் தானே?. ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளீர்கள். எந்த தகவல் என்றாலும் அதை கமிஷனில் தான் கொடுக்க வேண்டும். 

Advertisment

அதிகாரிகள் மூலம், தன்னுடைய அதிகாரத்தை வைத்து உண்மை சம்பவத்தை மறைத்துவிடலாம் என்றால் நிச்சயமாக நடக்காது. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும். கரூரில் இருக்கும் முன்னாள் அமைச்சர், ஏன் பதறுகிறார்?. மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் இருக்கக் கூடாது. ஆனால் முகத்தில் பயம் தெரிகிறது. அவர் பேச்சில் பயம் தெரிகிறது. மாறி மாறி அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் எல்லாம் உண்மையை மறைத்துப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.  பணத்தைக் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்று கரூர் எம்.எல்.ஏ நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருமுறை மக்கள் ஏமாந்து விட்டார்கள். இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். 

Advertisment

உங்களுடைய போலிக் கொலுசு, போலி வாக்குறுதி இனி எடுபடாது. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 3 சென்ட் இடம் தன்னுடைய சொந்தப் பணத்தில் வாங்கிக் கொடுப்பதாகவும், வீடுகட்டித் தருவதாகவும் 25 ஆயிரம் பேருக்கு வாக்குறுதி கொடுத்தார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும். இன்றைய முதல்வர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தனையும் வெற்று அறிவிப்பு. அவற்றை எல்லாம் மாவட்ட மக்கள் ஞாபகம் வைத்திருக்கிறார்கள், எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். சரியான தண்டனை வழங்குவார்கள். 

துயர சம்பவம் நடந்துவிட்டது. முதல்வர் இரவோடு இரவாக வந்து ஆறுதல் சொன்னார். துணை முதல்வர் வெளிநாடு போய்விட்டார். ஏங்க இங்கே நாடு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு, நாட்டு மக்கள் பதறிக்கொண்டு இருக்கிறார்கள். உடனே தனி விமானம் பிடித்து வருகிறார். பார்த்தார். மீண்டும் விமானம் ஏறி போய்விட்டார். இவரெல்லாம் ஆண்டால் நாடு உருப்படியாக இருக்குமா?. மக்கள் உயிரிழந்து துடிக்கும் நேரத்தில் கூட இவர்களுக்கு இரக்கம் இல்லை. சுற்றுப்பயணம் தான் முக்கியம். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை நாட்டு மக்கள் உணரவேண்டும். ஒரு துணை முதல்வர் இவ்வளவு பெரிய பிரச்னை ஏற்படும்போது எங்கே இருக்க வேண்டும்?. தமிழ்நாட்டில் இருந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும். 

நெரிசலில் சிக்கியவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தி இருந்தால் ஒரு நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். யார் எப்படி இருந்தால் என்ன..? தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். இதுதான் ஆட்சியாளர்களின் குறிக்கோள். இனியாவது அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு கொடுங்கள். இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் நம்முடைய சகோதர, சகோதரிகள். யார் இறந்தாலும் அது நம் குடும்ப இழப்பு என்பதை உணரவேண்டும். திமுக இதை இன்னமும் உணர்ந்தபாடில்லை” எனப் பேசினார். 

dmk admk dharmapuri Edappadi K Palaniswamy tvk karur stampede
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe