திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, தொகுதி மக்களிடம் பேசும் போது, திமுக ஆட்சியை நோக்கி சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். அதாவது அத்தொகுதி மக்களிடம் பேசிய அவர், “திமுக அரசு 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டு 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் செய்தி வந்திருக்கிறது. 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள். அத்தனையும் உண்மையென்றால் நாங்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் எங்கே?. இதற்கு வெள்ளை அறிக்கை கேட்டால் தரம் தாழ்த்திப் பேசுவதா?

Advertisment

நான் ஆம்புலன்ஸைத் தடுக்கிறேன் என்று துணை முதல்வர் உதயநிதி பேசுகிறார். எப்போதும் நான் தடுக்கவில்லை. 20 கூட்டத்தில் நடந்தவை எல்லாம் வீடியோ பதிவில் இருக்கிறது. நான் என்ன பேசினேன் என்பதும் பதிவில் உள்ளது. அதை எடுத்து எல்லா தொலைக் காட்சிக்கும் அனுப்பினோம். எப்போது ஆரம்பித்தாலும் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிடச்செய்வேன். உண்மையான அரசாக இருந்தால், எஸ்.பி.க்கு மா.செ புகார் கொடுத்தவுடன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து இருக்க வேண்டும். அதுதான் ஒரு நல்லாட்சிக்கு அழகு. அதை இந்த திமுக ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது. இவ்வளவு கூட்டம் இருப்பதைப் பார்க்க அவர்களால் முடியவில்லை. எரிச்சலாகிறார்கள்.  

ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் அணை கட்டுவதற்கு உறுதுணையாக இருந்த வி.கே.பழனிசாமிக்கு, முழு திருவுருவச்சிலை அமைக்கப்படும். போயர் சமூக மக்கள் அதிகமாக வாழ்வதாகவும், அவர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அச்சமூக மக்கள் நலம் பெற நலவாரியம் அமைக்கப்படும். தென்னை விவசாயிகள் நலன் கருதி ரேஷன் கடையில் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். அதிமுக ஆட்சி வந்ததும் பரிசீலிக்கப்படும்” எனப் பேசினார்.