கோப்புப்படம்
அதிமுகவின் பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதாவின் 78வது பிறந்த தினம் இன்று (24.022026) தமிழகம் முழுவதும் உள்ள அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளில், அவரின் நெடும் புகழை போற்றுகிறோம், ஜெயலலிதா எங்களின் அடையாளம். ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை. மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.
ஜெயலலிதாவின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்பிற்கான உலகளாவிய தரநிலைகளை (Poverty Alleviation - Global standards) நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். மக்களுக்கான எங்கள் அனைத்து செயல்களிலும் உங்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்று ஜெயலலிதா சொன்னதைப் போல அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.
எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்த நாள். அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க.வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, அதிமுக தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/24/jayalalithaa-poster-by-eps-2026-02-24-10-41-45.jpg)
ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம் என்று ஜெயலலிதாவின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம். நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். வாழ்க எம்.ஜி.ஆரின் புகழ். வளர்க ஜெயலலிதாவின் பெரும் புகழ். வெல்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us