தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விருதுநகரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்குத் தமிழகத்தில் ஏழை என்ற சொல் இல்லை என்ற நிலையை உருவாக்குவதுதான் எங்களுடைய லட்சியம்.
அதற்காக அதிமுக அரசு நிறையத் திட்டங்களைத் தேர்தல் நேரத்திலே அறிவிப்போம் என்பதை இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன். நான் முதலமைச்சராக இருந்த போது, மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவர் ஊர் ஊராகச் சென்றார். அதன்படி அங்குச் சென்று ஒரு திட்டில் பாயை விரித்துப் போட்டு அமர்ந்து கொண்டு, அவருக்கு முன்னால் மக்களை எல்லாம் அமரவைத்து அந்த மக்களிடம் குறைகள் எல்லாம் கேட்டார். அப்போது அவர், ‘உங்களுடைய குறைகள் எல்லாம் மனுவாக எழுதி நான் கொண்டு வந்துள்ள பெட்டியில் போடுங்கள். நான் அந்த பெட்டியைப் பூட்டி சீல் வைத்து வீட்டுக்கு எடுத்துக் கொண்டு செல்வேன். அதன் பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சீலை உடைத்து பெட்டியைத் திறந்து மனுவை எடுத்துப் படித்துப் பார்த்து உங்களுடைய குறையைத் தீர்ப்பேன்’ என்றார்.
அப்புறம் எதற்கு இது? (உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கான அடையை மக்களிடம் காண்பித்தார்). ஏற்கனவே போட்ட மனு என்ன ஆனது?. படத்தில் சொல்வார்கள். சதுரங்க வேட்டை என்று நினைக்கிறேன். ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் ஆசையைத் தூண்ட வேண்டும். அப்படி இன்றைய முதலமைச்சர் உங்களுடைய ஆசையைத் தூண்டி வாக்குகளைப் பெறுவதற்குத் தந்திரமாக இந்த மாடலை எடுத்திருக்கின்றார். நீங்கள் விழிப்போடு இருந்து அடுத்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலே அனைத்து இந்திய அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு நல் ஆதரவை நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.