தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியிக்கு உட்பட்ட பகுதியில் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (03.10.2025) பேசுகையில்,“இன்றைய தினம் பதற வைக்கின்ற ஒரு செய்தி பத்திரிக்கையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆந்திர மாநிலத்திலிருந்து வாழைத் தார்களை ஏற்றிக்கொண்டு லாரி திருவண்ணாமலைக்கு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை நகரத்தில் லாரி நுழையும் பொழுது லாரியில் 2 பெண்மணி இருக்கின்றார்கள். அதாவது டிரைவரின் அக்கா ஒருவரும், அக்கா அக்கா மகள் என மற்றொருவரும் உள்ளனர். உடனே காவலர்கள் இருவர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதோடு இந்த 2 பெண்மணிகள் யார் என்று விசாரித்த போது, லாரி டிரைவர் குறிப்பிட்டார் நான் வாழைத்தாரை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலைக்கு வந்திருக்கிறேன். அதோடு சாமி தரிசனம் செய்ய என் குடும்பத்தைச் சேர்ந்த அக்காவையும், அக்கா மகளையும் அழைத்து வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். இதனை நம்பத் தயாராக இல்லை என்று 2 காவலர்களும் விடாப்பிடியாக 2 பெண்மணிகளையும் கீழே இறக்கி அவர்கள் கொண்டு வந்த இரு வாகனத்தில் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த தாய் கண்ணெதிரே அவருடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள். இது 29ஆம் தேதி நடந்த சம்பவம். மன்னிக்க முடியாத சம்பவம். ஒரு தாயின் கண்ணெதிரே தன் மகளைக் காவலர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மக்களைப் பாதுகாக்கக்கூடிய காவலர்களே இப்படிப்பட்ட ஒரு கொடூரமான செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொன்னால் இந்த அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். திறமையற்ற முதலமைச்சர் காவல் துறை அவரிடம் இருக்கின்றது. சரியாக நிர்வாகம் செய்யாத காரணத்தினாலே இன்றைக்கு 2 காவலர்கள் மக்களைப் பாதுகாக்கக் கூடிய காவலர்கள் 2 பெண்மணிகளை அழைத்துச் சென்று, தாயின் கண்ணெதிரே மகளை பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள் என்று சொன்னால் இந்த அரசாங்கம் தொடர வேண்டுமா?. இன்றைக்குப் பயிரை வேலி பாதுகாக்கின்றது போல நாட்டு மக்களைப் பாதுகாப்பது காவல் துறை. அதை நம்பித்தான் மக்கள் இருக்கின்றார்கள். ஆனால் இன்றைய தினம் ஒரு கொடூரமான சம்பவம் திருவண்ணாமலையில் அரங்கேறி இருக்கிறது.
காவலர்கள் இரு பெண்களையும் திருவண்ணாமலையில் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த பெண்மணி அழுது கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற மக்கள் என்ன ஏது என்று விசாரித்த போது நடந்த கொடூரமான சம்பவத்தை சொன்னவுடன் 108 ஆம்புலன்ஸுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி 108 ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். இந்த தகவல் அங்குள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கொடுக்கப்பட்டு இதில் சம்பந்தப்பட்ட2 காவலர்களைக் கைது செய்து சிறையிலே அடைத்திருக்கின்றார்கள்.
இது எப்படிப்பட்ட நிகழ்வு என்பதை தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்குக் காவல் துறை என்பது மிக மிக முக்கியம். தமிழகத்தில் இருக்கின்ற காவல்துறை ஒரு காலத்தில் ஸ்காட்லாந்த் காவல்துறைக்கு இணையாகப் போற்றப்பட்ட காவல்துறை ஆகும். ஆனால் திறமையற்ற முதலமைச்சர் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கின்ற காரணத்தினால் காவல்துறை செயலிழந்து தவறான செயலில் ஈடுபடுகின்ற சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே நினைவு கூர்கிறேன்.அதிமுக ஆட்சியிலே சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது” எனப் பேசினார்.