தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தின்படி, கடந்த 8ஆம் தேதி (08.10.2025) நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அதன் ஒரு பகுதியாக குமாரப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது த.வெ.க. கொடியை சிலர் உயர்த்திப்பிடித்தபடி இருந்தனர். இதனைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவைதான். ஆனால் அதிமுக தலைமையிலே அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். இங்கே பாருங்கள் கொடி பறக்கிறது (என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்). பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி ஆரவாரம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே குமாரப்பாளையத்தில் நடைபெறுகின்ற கூட்டத்தினுடைய ஆரவாரம் உங்கள் செவியைத் துளைத்துக்கொண்டு செல்ல உள்ளது” எனப் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “நீங்கள் பரப்புரைக்குச் செல்லும் இடங்களில் எல்லாம் த.வெ.க.வினர் வரவேற்பு கொடுக்கிறார்கள். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்துப் பேசுகையில், “விருப்பப்பட்டு வந்து ஆதரவு கொடுக்கிறார்கள். நாங்கள் கூடச் சொன்னோம் இது தொடர்பாகத் தலைமையினுடைய ஆணையைப் பெற்று வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். எங்களுடைய (அதிமுக) மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் அவர்கள் அவர்கள் ஆர்வத்தோடு வந்து கலந்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களால் இதனைப் பொறுக்க முடியவில்லை. எப்போது நாங்கள் பா. ஜ.க.விடம் கூட்டணி வைத்த அன்றையிலிருந்து இருந்து இன்று வரைக்கும் எங்களைப்பற்றித்தான் விமர்சனம் செய்கிறார்கள்.
நாங்கள் யாரோடு கூட்டணி வைத்தால் இவர்களுக்கு என்ன கஷ்டமாக இருக்கிறது? இவர்கள் தி.மு.க. தலைமையிலே கூட்டணி அமைத்துள்ளனர். திமுக, காங்கிரஸ் , வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சி இப்படிப் பல கட்சிகள் அங்கே கூட்டணி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சித் தலைவர்களும் எங்களைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதி முக என்ற எங்களோடு கூட்டணி விரும்புகின்ற கட்சியோடு நாங்கள் கூட்டணி வைக்கிறோம். இதற்கு ஒரு விமர்சனம். அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் கூட்டணி இல்லையென்றால் அவர்களுக்கு வெற்றி எளிதாக வரும் என்று நினைக்கிறார்கள் . அது ஒருபோதும் நடக்காது” எனப் பேசினார்.