செங்கல்பட்டு மாவட்டம் மதுராங்கத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் இன்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பேற்று நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நான்கே முக்கால் ஆண்டு காலத்திலே மக்களுக்கு இந்த ஆட்சி கொடுத்தது வேதனை; துன்பம். 

Advertisment

எல்லா துறைகளிலும் ஊழல். ஊழல் இல்லாத துறையே கிடையாது. மக்களை வாட்டி வதைக்கின்ற அரசாங்கம் தேவையா?. மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ எட்டு கோடி மக்களை சுரண்டுவது நியாயமா?. இன்றைக்கு தமிழகத்திலே கலைஞரின் குடும்பம் ஆட்சியிலே அமர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றது. கலைஞர் முதலமைச்சராக இருந்தார். அதற்கு பிறகு மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கிறார். இவர் ஆட்சி பொறுப்பேற்று நான்கே முக்கால் ஆண்டு காலத்திலே அவர் செய்த சாதனை ஒன்றே ஒன்று ஊழல்... ஊழல்... ஊழல். இன்றைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினுடைய குடும்பம் உலக அளவிலே மிகப்பெரிய பணக்கார குடும்பமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் வர வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். 

Advertisment

திராவிட முன்னேற்ற கழகத்தில் எத்தனையோ பேர் உழைத்தவர்கள்; இருக்கின்றார்கள். அவர்கள எல்லாம் வீதியிலே இருப்பதை பார்க்கிறோம். ஆனால் கலைஞர் குடும்பத்திலே பிறந்தவர்களுக்குதான் அந்த கட்சியிலும் இடம். அதிகாரத்தில் இடம். அந்த அடிப்படையிலேதான் எந்த ஒரு தகுதியும் இல்லாத உதயநிதியை முதலே சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள். பிறகு அமைச்சர் ஆக்கினார்கள். இப்போது துணை முதலமைச்சர் ஆக்கி இருக்கின்றார்கள். அடுத்தது எந்தக் காலத்துக்கும் எந்த பதவிக்கும் கலைஞர் குடும்பம் வர முடியாது. வர முடியுமா? இந்த தேர்தல்தான் திமுகவுக்கு இறுதி தேர்தல். தீயசக்தி திமுகவை வீழ்த்துவோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்றுவோம். தேசிய ஜனநாயக கூட்டணினுடைய சக்தியால் பிரதமர் மோடி நமக்கு துணை நிற்கின்றார். 

nda-meeting-modi

இன்றைக்கு இந்த இயக்கம் வலிமையான இயக்கம். இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வலிமையான கூட்டணி. தேர்தல் என்ற போரில் இந்த கூட்டணி கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் இரவு பகல் பாராமல் தேனீக்களை போல, எறும்பை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு தேர்தல் போரிலே எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்டுவோம். இந்த தேர்தலை பொறுத்தவரைக்கும் குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தல். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு முடிவு கட்டுகின்ற தேர்தல். இந்த தேர்தல் நம்முடைய வெற்றிக்கு மக்கள் துணை இருக்கின்றார்கள். இந்த கூட்டணி இந்த தேர்தலிலே 210 இடங்களிலே வெல்லும் பெருமான்மையான இடங்களிலே வெல்லும். அதிமுக ஆட்சி அமைக்கும்” எனப் பசினார். 

Advertisment