சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் அஜித்குமார். இவர் மீது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி (28.06.2025) நகை திருடியதாக நிகிதா என்பவர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார், அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விசாரணையின் போது போலீசார் அவரை தாக்கியதில் ஜூன் 29ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியது. அதோடு இந்த வழக்கைத் தமிழக அரசு ஏற்கனவே சி.பி.ஐ. விசாரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருந்தனர்.
இதற்கிடையே திமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தாயார் மாலதி மற்றும் தம்பி நவீன்குமாரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவியானது அதிமுக சார்பில் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது அவர் பேசுகையில், “மறைந்த அஜித்குமார் வீட்டுக்குச்சென்று, அவர் தாயாரைச் சந்தித்து, ஆறுதல் கூறுவதாக நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த அடிப்படையில் இன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே மாடப்புரம் கோயில் காவலாளி மறைந்த அஜீத்குமாருடைய வீட்டிற்குச் சென்று தாயாரைச் சந்தித்து அவருடைய சகோதரரைச் சந்தித்து ஆதரவு கூறியுள்ளோம். இது மிகுந்த வேதனைக்கும் வருத்தத்திற்கும் கண்டனத்துக்கும் உரியது. மக்களைப் பாதுகாக்கக்கூடிய காவல்துறையால் விலை மதிக்க முடியாத ஒரு உயிரை இழந்திருக்கின்றோம் என்பது பார்க்கின்ற போது உண்மையிலேயே வேதனையும் வருத்தத்தையும் அளிக்கின்றது. 27.06.2025 அன்று நகை மாயமானதாகப் புகார் அளிக்கப்பட்டது. 28.06.2025 அன்று இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மறைந்த அஜீத்குமார் தாக்கப்பட்டு இறந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
29.06.2025 அன்று இது குறித்து நான் கண்டன அறிக்கை வெளியிட்டு இருக்கின்றேன்.அதனைத் தொடர்ந்து அஜித்குமார் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களோடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினரான செந்தில் நாதனும், அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அவர்களோடு இணைந்து மறைந்த அஜித்குமார் நீதி கிடைக்கின்ற விதமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காரணத்தினால் வேறு வழியின்றி இந்த அரசு அஜித் குமார் விசாரணையின் போது தாக்கப்பட்ட காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்திருக்கின்றார்கள். அதே சமயம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் மாரிஷ் குமார் என்பவர் இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அதோடு மதுரை உயர்நீதிமன்றமும் தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது. அப்போது நீதிமன்றம் ஒரு குடிமகனை அரசே உயிரிழப்பதற்குக் காரணமாக இருந்துவிட்டது என்று கண்டனம் தெரிவித்திருக்கிறது. மறைந்த அஜித்குமாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலே அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போராட்டமும் நடைபெற்றது. ஆகவேதான் இந்த அரசு வேறு வழியின்றிபல காவல்துறை காவலர்கள் மீது வழக்கு பதிவுசெய்து அவர்களைக் கைது செய்து சிபிஐ இந்த வழக்கு விசாரிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கின்றது. ஆனால் இதில் ஒரு சம்பவம் என்னவென்றால் காவலர்களாக இவ்வளவு பெரிய தாக்குதலை ஏற்படுத்தி இருக்காளா?. என்று சொல்கின்ற போது ஐயம் ஏற்படுகின்றது?. சந்தேகம் ஏற்படுகின்றது. ஏனென்று சொன்னால் காவல்துறை சம்பந்தப்பட்ட இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்குக் காவலர்களுக்கு ஏதோஒரு பகுதியில் இருந்து மிகப்பெரிய அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் அவர்கள் இப்படிப்பட்ட தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள் என்று பரவலான செய்திகள் வெளி வந்தன.
அதுமட்டுமல்லாமல் அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை ஆய்வில் பார்க்கும்போது 44 இடங்களில் கடுமையாகத் தாக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது. அதனால்தான் அவர் இறந்தார் என்றும் வெளியாகி இருக்கின்றதுஆகவே அந்த அறிவிக்கையின்படி இந்த அரசாங்கம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். இந்த அரசாங்கம் சரியான முறையிலே இந்த வழக்கை விசாரிக்கப்பட்டிருந்தால் விலை மதிக்க முடியாத ஒரு உயிரை இழந்திருக்கமாட்டோம் என்பது தான் என்னுடைய கருத்து. வழக்குப் பதிவு செய்யாமலேயே ஒருவரை அழைத்துச் சென்று மிருகத்தனமாக தாக்கி அந்த வழக்கை மறைக்க இந்த அரசு ஏராளமான வேலைகளைப் பார்த்திருக்கிறார்கள். சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு தான் இந்த உண்மையாக வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகுகாவலர்கள் சஸ்பென்ட் செய்யப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.