அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் அமைந்துள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைத்துக் கொண்டார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய் செங்கோட்டையனுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மேலும் கட்சியின் துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பதிலுக்கு செங்கோட்டையனும் விஜய்க்குச் சால்வை அணிவித்தார். மேலும் கட்சியின் உறுப்பினர் அட்டையையும் பெற்றுக் கொண்டார். அதோடு செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகளும், செங்கோட்டையனின் ஆதரவாளர்களுமான ஏராளமானோர் அங்கு வருகை தந்து தங்களை த.வெ.க.வில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் தொடக்கத்தில் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
இத்தகைய சூழலில் தான் த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையனுக்கு, அக்கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மதுரையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துப் பேசுகையில், “அவர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை. அதனால் அதற்குப் பதில் சொல்ல அவசியமில்லை” எனத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
Follow Us