அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (29.07.2025) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “காங்கிரஸ் கட்சியின் தலைமையில் த.வெ.க. இணைந்து 3வது கூட்டணி உருவாகுவதாகவும் சொல்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நாங்கள் எப்படி பதில் சொல்ல முடியும்?. யூகத்தின் அடிப்படையில் எல்லாம் எப்படி பதில் சொல்ல முடியும்?. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. அந்தந்த கட்சிகள் அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் அவர்கள் முடிவு செய்வார்கள்” எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையேயான கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “எங்கள் கூட்டணியில் அ.தி.மு.க. பா.ஜ.க. இருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியில் பல கட்சிகள் இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு கூட்டணியில் யார் யார் எல்லாம் இருப்போம் என்பது பத்திரிகை ஊடகத்தை வைத்துத் தெளிவாக நான் குறிப்பிடுவேன்” எனப் பேசினார்.