பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ் - ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது. 

Advertisment

அந்த வகையில் 243 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி மதியம் 01.10 மணியளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 198 இடங்களிலும், இந்தியா கூட்டணி 39 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. முதன் முதலாக தேர்தலைச் சந்தித்த பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ பீகார் சட்டமன்றத் தேர்தலில், பீகார் மக்கள் காங்கிரசுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பொய்களையும், ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சிகளையும் நிராகரித்து, பீகார் மக்கள் அதற்குப் பொருத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளனர். 

bh-nda

கூட்டணியின் கூட்டுத் தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கையையும், ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டையும் இந்த தேர்தல் முடிவு மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த வெற்றியைப் பெறுவதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆகியோருக்கு அதிமுக சார்பாக, எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலுவான தீர்ப்பு பீகாரின் முன்னேற்றத்தையும் பொது நலனையும் மேலும் துரிதப்படுத்தும் என்று நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisment