அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (12.09.2025) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திரபாபு 2.ஓ, 3.ஓ, 4. ஓ என்று அவர் ஓய்வு பெறுகின்ற வரை ஓ போட்டு ஓய்வு பெற்றுப் போய்விட்டார். ஏனென்றால் அவரால் போதைப் பொருட்களை ஒழிக்க முடியாது. கஞ்சா விற்பனையானது பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் துணையோடு அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் காவல்துறையால் சுயமாகச் சுதந்திரமாகப் போதை ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இன்றைக்குக் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 

Advertisment

காவல்துறை அதிகாரிகள் தன்னுடைய அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திப் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க முடியாத ஒரு அவல நிலை தமிழகத்திலே நிலவுகிறது. மீண்டும் மக்களின் துணையோடு அதிமுக அரசு அடுத்த ஆண்டு அமைகின்ற போது போதை நடமாட்டத்தை முழுவதும் தடுத்து நிறுத்தப்படும். போதை ஆசாமியால்தான் சிறுமி முதல் முதியோர் வரை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் முதியோர்களைக் குறிவைத்து அடிக்கடி கொலை நடைபெறுகிறது. முதியோருடைய சொத்துக்கள் உடைமைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 

கொங்கு மண்டலத்தில் தான் அதிகமாக முதியோர்கள் தாக்கப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவருடைய உடைமைகள் திருடப்படுகின்றன . இந்த ஆட்சியின் லட்சணம் என்ன என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு அரசாங்கம் ஒரு பிரச்சனை ஏற்படுகின்ற போது விழிப்போடு இருந்து அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தால் இப்படி முதியோருடைய விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை” எனப் பேசினார்.