தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இரு வேறு தரநிலையில் ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டுக்கு முன்னரும், அதன் பின்னரும் பணியில் நியமன்ம் பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியத்தில் முரண்பாடு இருப்பதாக கூறி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (26.12.2025) இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். 

Advertisment

அப்போது அங்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இடைநிலை ஆசிரியர்களை கைது செய்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021 தேர்தலின்போது அளித்த வாக்குறுதி எண் 311ஐ நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை, திமுக அரசின் காவல்துறை அராஜகப் போக்குடன் கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்று வாக்குறுதி அளித்துவிட்டு, நான்கரை ஆண்டுகளாக ஆசிரியர்களை போராட விட்டு வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் பாசிசப் போக்கு வெட்கக்கேடானது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லை எனில், அதனை ஒப்புக்கொள்ளுங்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே. ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார்.