பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வணக்கம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே...ரிப்பன் மாளிகை வாசலில், நள்ளிரவில் அடக்குமுறையை ஏவி , கொரானவின் போது கூட நம் குப்பைகளை நீக்கி சுத்தம் செய்த தூய்மை பணியாளர்களை அடித்து நொறுக்கி , அங்கிருந்து அகற்றி பல்வேறு இடங்களில் சிறை வைத்துள்ளனர் உங்கள் ஏவல்துறை.
யார் அவர்கள்?. சமூக விரோதிகளா?. குண்டர்களா?. நக்சலைட்டுகளா?. இல்லையே. ஏழை எளிய மக்கள்! அன்றாடம் தூய்மைப் பணி செய்து, சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருந்தவர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அதற்கு நேர்மாறாக செயல்பட்டத்தைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் அறவழியில் போராடியது ஒரு தவறா?. அவர்களோடு டீ, காபி அருந்தியது போல் போட்டோஷூட் எடுத்துக்கொண்டீர்களே. அப்போது மட்டும் இனித்தது? இப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் கேட்கும் போது கசக்கிறதா?. எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இருந்தபோது எழுதிய கடிதங்களில், எந்த வழக்கு இருந்தாலும், இவர்கள் பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று நாடகமாடினேரே, நினைவில் இருக்கிறதா?.
நள்ளிரவில் அடாவடித்தனமாக, வலுக்கட்டயாமாக நம் அரசுக்கும் மக்களுக்கும் பணி புரியும் , நலிவடைந்த தூய்மை பணியாளர்கள் மீது 79 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இது போன்ற ஒரு அடக்குமுறையை எந்த அரசும் ஏவியதில்லை. தூய்மை பணியாளர்கள் 8க்கும் மேற்பட்ட இடத்தில் சிறை வைக்கபட்டுள்ளார்கள். அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய பட வேண்டும் எனவும், இந்த அடாவடி நடவடிக்கைகளால் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன். தூய்மைப் பணியாளர்களின் கண்ணீரை, வலியை, வேதனையை தமிழ்நாடே பார்த்து கலங்குகிறது. அவர்கள் சிந்திய ஒவ்வொரு கண்ணீருக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சொல்ல வேண்டிய காலம் அவ்வளவு தூரமெல்லாம் இல்லை. இன்னும் 8 மாதங்கள் தான்” என முதல்வர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.