மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் அருகே 9வது சர்வதேச சாந்தலி மாநாடு நேற்று  (07.03.2026) நடைபெற்றது. இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக முதலில் சிலிகுரி அருகே உள்ள பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த இந்த மாநாடு, கடைசி நேரத்தில் மாநில நிர்வாகத்தால் சிறிய இடமான கோசைன்பூருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிதான்நகர் மைதானத்தில் நடைபெறவிருந்த  மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டார். 

Advertisment

அதன் பிறகு அவர் பேசுகையில், “சர்வதேச சந்தால் மாநாடு இன்று (அதாவது நேற்று) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இங்கு வந்தபோது, இந்த இடம் மிகவும் பரந்த அளவில் இருப்பதால் இங்கேயே மாநாட்டை நடத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. நிர்வாகத்தின் மனதில் என்ன ஓடியது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த இடம் நெருக்கடியாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். ஆனால் இங்கு ஐந்து லட்சம் மக்கள் எளிதாகக் கூட முடியும் என்று நான் நினைக்கிறேன். எதற்காக எங்களை அங்கு அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

Advertisment

சந்தால் மக்கள் செல்ல முடியாத ஓரிடத்தை மாநாட்டிற்காக நிர்வாகம் ஏன் தேர்ந்தெடுத்தது என்று எனக்குத் புரியவில்லை. இந்த மாநாடு மிகத் தொலைவில் நடைபெற்றதால், இங்குள்ள மக்களால் அங்கு வர முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஒருவேளை யாராலும் கலந்து கொள்ள முடியாது, குடியரசுத் தலைவர் அப்படியே திரும்பிச் சென்றுவிடுவார் என்று நிர்வாகம் எதிர்பார்த்திருக்கலாம். குடியரசுத் தலைவர் ஓரிடத்திற்கு வருகை தரும்போது, முதலமைச்சரும் அமைச்சர்களும் வந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. நானும் வங்காளத்தின் மகள் தான். மம்தா தீதி எனது சகோதரி. எனது தங்கை போன்றவர். அவர் என் மீது கோபமாக இருந்தாரா?. என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் தான் இப்படி நடந்ததோ என்னவோ?” எனக் கேள்வி எழுப்பினார். 

murmu mic-mamta

இந்நிலையில் சம்பவத்தை குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் குடியரசுத் தலைவர் பங்கேற்கும் ஒரு பொது நிகழ்ச்சியில், அவருக்கு இழைக்கப்படும் எந்தவொரு அவமரியாதையும், நடைமுறை குறைபாடுகளும் அதனால் ஏற்படும் சங்கடங்களும் வருத்தத்திற்குரியவை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. 

Advertisment

இத்தகைய சம்பவம் குறித்து  குடியரசுத் தலைவர் பகிரங்கமாக வேதனை தெரிவிக்க நேரிட்டது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அரசியலமைப்பு பதவிகள் என்பவை வெறும் சடங்கு சார்ந்த அடையாளங்கள் மட்டுமல்ல. அவை நமது குடியரசின் கண்ணியத்தைப் பிரதிபலிக்கின்றன. நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களின் செயல்பாடுகள் எப்போதும் நாட்டின் உயரிய பதவிக்கு அளிக்க வேண்டிய உரிய மரியாதையைப் பிரதிபலிப்பதை உறுதி செய்யும் பொறுப்பைக் கொண்டுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.