அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (11.09.2025) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கொப்பரை தேங்காய் விலை குறைவாக இருந்தது. இது குறித்து என்னுடைய கவனத்திற்கு இங்கே உள்ள விவசாயிகளும் அப்போது இருந்த அமைச்சர்களும் என்னிடத்தில் தெரிவித்தார்கள்.
இது குறித்து உடனடியாக மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு கொப்பரை தேங்காயின் விலையை உயர்த்தி கொடுத்தது அதிமுக அரசாங்கம். அதேபோல தென்னையைக் காப்பாற்ற வேண்டும், காப்பாற்றி நல்ல விளைச்சல் பெற வேண்டும் என்ற ஒரே அடிப்படையில் தென்னை விவசாயிகளுடைய வாழ்க்கை ஏற்றம் பெறுவதற்காக அதிமுக ஆட்சியில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு சுமார் 100 ஏக்கர் அரசு நிலத்தைக் கொடுத்தோம். அதன் மூலமாகத் தென்னை ஆராய்ச்சி வாரியம் , தென்னை வளர்ச்சி வாரியம், ஆராய்ச்சி நிலையம் அந்த பகுதியிலே அமைக்கப்பட்டு அதன் மூலமாக விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை இலவசமாகவும், மானிய விலையிலும் விவசாயிகளுக்குக் கொடுக்கப்பட்டது.
அதோடு இந்த திட்டத்திற்குத் தண்ணீர் வேண்டும் என்பதற்காக திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் கொடுப்பதற்காக அதிமுக ஆட்சியில் அனுமதி கொடுத்தோம். ஆனால் திமுக ஆட்சியில் அதனைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தென்னை வளர்ச்சி வாரியத்திற்குத் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விவசாயிகளின் கஷ்டத்தை போக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கேரளாவிலிருந்து இன்றைக்கு வாடல் நோய் வந்துவிட்டது. வாடல் நோயிலிருந்து தென்னையைக் காப்பாற்றி விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கக்கூடிய சூழ்நிலையை அதிமுக ஆட்சியில் உருவாக்கிக் கொடுக்கப்படும். தென்னையிலிருந்து நீரா பானம் தயாரிப்பதற்கு அதிமுக ஆட்சியில் தான் அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படிப் பல திட்டங்களை விவசாயிகளுக்குச் செய்தது அதிமுக அரசாங்கம்” எனப் பேசினார்.