அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது திமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (19.09.2025) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுகவினர் உங்களுக்காகச் செயல்படுவதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அருகிலேயே இருக்கின்றேன். இது உண்மை தானே?. கிராமத்தில் இருந்து நகரம் வரை கஞ்சா விற்காத இடமே இல்லை. கஞ்சா பல வடிவத்தில் வந்துவிட்டது. 

Advertisment

சாக்லேட்டில் வந்திருக்கிற தாம். அது என்னவென்று தெரியவில்லை. இன்றைக்குப் பார்த்தேன் ஆம்லெட்டில் அதனைக் கலக்கிப் போட்டுக் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். கஞ்சா போதையைக் கலக்கி உணவு பரிமாறுவதாகப் பத்திரிகைச் செய்தி வந்துள்ளது. எவ்வளவு மோசமான நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். போதைப்பொருள் விற்பனை தமிழகத்தில் நடமாடுகின்ற போதே நான் இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விட்டேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற ஒரே ஆண்டுக் காலத்தில் நான் தொலைக்காட்சியின் வாயிலாக இந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தேன். சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றது. 

அதை தடுத்து நிறுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் (அதிமுக) சட்டமன்றத்தில் பேசினோம். அப்போது எல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாங்கள் சொல்வதை எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் இன்றைய தினம் தமிழகத்தில் போதை பொருள் நிறைந்த மாநிலமாக இருந்து கொண்டிருக்கின்றது. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சீரழியக்கூடிய ஆட்சி, சீரழியக்கூடிய காட்சி இந்த ஆட்சியில் தான் பார்க்கிறோம் . இது மிகவும் மோசம். போதைக்கு அடிமையாகிவிட்டால் அவரை திருத்தவே முடியாது. இப்படிப்பட்ட ஒரு வெட்கக்கேடான ஆட்சி தொடர வேண்டுமா?. 

இன்றைய தினம் முதலமைச்சர் சொல்கிறார். கிட்டத்தட்ட எத்தனை வருஷம் மூன்றரை வருஷம் கழித்து இப்போது தொலைக்காட்சியின் வாயிலாக பேசுகிறார். இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று. இப்போது சொல்லி என்ன பிரயோஜனம்?. நாங்கள் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த இளைஞர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் இப்போது அந்த போதைக்கு அடிமையாகி அவர்கள் சீரழிந்த பிறகு இன்றைக்கு முதலமைச்சருக்கு ஞானோதயம் வந்து ஊடகத்தின் வாயிலாக அவர் கருத்தை சொல்லி இருக்கிறார் இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள். இப்படிப்பட்ட முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா?.

Advertisment