தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “பொங்கல் பண்டிகையின் போது ஒரு பகுதியில் சேலை கொடுத்தால் ஒரு பகுதியில் வேஷ்டி கொடுப்பதில்லை. ஒரு பகுதியில் வேஷ்டி கொடுத்தால் ஒரு பகுதியில் சேலை கொடுப்பதில்லை. சில இடத்தில் இரண்டுமே கொடுக்கவில்லை. இப்படி இந்த ஆட்சியில் வேஷ்டி சேலை கொடுப்பதிலே மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. உங்களால், உங்களுடைய துணையால் அதிமுக ஆட்சி மீண்டும் வருகிற போது ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று குடும்ப அட்டை வைத்திருக்கும் அத்தனை பேருக்குமே விலையில்லா வேஷ்டி சேலை தரமாக வழங்கப்படும். அது அதுமட்டுமில்லாமல் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் ஒவ்வொரு தீபாவளி அன்றும் அருமையான சேலை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்த உடனே தீபாவளிக்கு அற்புதமான சேலை வழங்கப்படும்.
அதிமுக ஆட்சியில்தான் விலைவாசி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தோம். அரிசி விலையாகட்டும், பருப்பு விளையாகட்டும், எண்ணெய் விலையாகட்டும் இது போன்று விலைவாசி உயராமல் அதிமுக ஆட்சியிலே பார்த்துக் கொள்ளப்பட்டது. இதனால் ஏழை மக்கள் பாதிப்பில்லாமல் அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக நடந்தது. திமுக ஆட்சியில் விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி உயர்ந்து போச்சு. அதைப் பத்தி எல்லாம் கவலையேபடாத ஒரு முதலமைச்சர் உள்ளார். அவர் இது குறித்துக் கவலைப்பட்டு இருக்கிறாரா?.
அதைப் பத்தி கவலையே இல்லை. நேற்றைய தினம் கூட அவருடைய கல்யாண நாள் என்று நினைக்கிறேன். நல்லா ஜாலியாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறார். நாட்டு மக்கள் எவ்வளவு பிரச்சனையில் இருக்கும்போது கொண்டாடுகிறார்கள். அதனை வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் மக்களைப் பார்க்க வேண்டும் அல்லவா?. நம்மைத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய அவர்களுக்கு என்ன பிரச்சனை?.அந்த பிரச்சனையை எப்படித் தீர்ப்பது?. அவர்களை எப்படி மகிழ்ச்சியாக வாழ்வது அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை” எனப் பேசினார்.