அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆணைமலையில் எடப்பாடி பழனிசாமி இன்று (10.09.2025) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த ஆட்சியில் நன்மை கிடைத்திருக்கிறதா? அதிமுக நாலாகப் போய்விட்டது. மூன்றாகப் போய்விட்டது என்று கூறுகிறார்கள். எல்லாம் ஒன்றாக இருக்கின்றதை 2026 சட்டமன்றத் தேர்தலில் காண்பிப்போம். இப்படி சொல்லித்தான் தொலைக்காட்சியிலும், பத்திரிகை மூலமாகவும் அவதூறுப் பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறீர்கள். ஆனைமலையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் அடுத்த ஆண்டு நடைபெறச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்கு வருகின்ற கூட்டம்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் எப்போது பேசினாலும் குறிப்பிடுகின்றார். திமுக தலைமையிலே பல கட்சிகள் கூட்டணியிலே இருக்கின்றன. எங்களுக்குக் கூட்டணி பலம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரைக்கும் மக்களை நம்பி இருக்கிறது. இங்கே இருக்கின்ற மக்கள் தான் யார் ஆட்சிக்கு வர வேண்டும். எந்த ஆட்சியை இறக்க வேண்டும் என்று முடிவு செய்வது நீங்கள்தானே?. அதனையெல்லாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மறந்துவிட்டு எப்பொழுது பார்த்தாலும் கூட்டணி... கூட்டணி.... கூட்டணி தான் எங்களை வாழ வைப்பது போல அவர் நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் மக்கள் அந்த நிலையிலே இல்லை. மீண்டும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றார்கள்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னொன்றையும் சொல்கிறார். திமுக என்ன கொள்கையில் இருக்கிறதோ அதே கொள்கையில் தான் கூட்டணிக் கட்சிக்கு இருக்கிறது என்று கூறுகிறார். அப்படியென்றால் ஒரே கட்சியாக இருந்துரலாமே. எதற்கு தனித்தனி கட்சி வைத்திருக்கிறீர்கள். உண்மைதானே?. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது அதிமுகவிற்கு ஒரு கொள்கை. பா.ஜ.க.வுகு ஒரு கொள்கை. திமுகவுக்கு ஒரு கொள்கை . காங்கிரஸுக்கு ஒரு கொள்கை. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு கொள்கை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு கொள்கை என்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சொல்கிறார் ஒரே கொள்கையோடு கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைத்திருக்கிறதாகச் சொல்கிறார். அப்படி என்றால் எல்லா கட்சியும் திமுகவுக்கு போயிரலாம். தனித்தனி கட்சி நடத்த வேண்டிய அவசியமே இல்லை. அதிமுகவைப் பொறுத்தவரைக்கும் கொள்கை வேறு. கூட்டணி வேறு. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் அமைக்கப்படுவது. கொள்கை என்பது நிலையானது” எனப் பேசினார்.