EPS says It is during the DMK regime that all the body organs are stolen
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் இன்று (24-08-25) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணச்சநல்லூர் தொகுதியில் துறையூர் பிரதான சாலையில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர், “மணச்சநல்லூர் என்றாலே பொன்னி அரிசிதான் ஞாபகம் வரும். இங்கு விளையும் அரிசி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தொகுதியில் பேசுவது மகிழ்ச்சி. நானும் ஒரு விவசாயி, விவசாயிகளின் கஷ்டங்களை அனுபவரீதியாக உணர்ந்தவன். விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். ஆனால், இந்த ஆட்சியில் இரண்டு மக்களுக்கும் நன்மை கிடைக்கவில்லை. தொடக்க வேளாண் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டு முறை தள்ளுபடி செய்தோம். இந்தியாவில் வேறெங்கும் இப்படி இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டதில்லை எனும் அளவுக்கு 12,100 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணி நேரம் கொடுத்தோம். ஆனால், இன்று ஷிப்ட் முறையில் மின் விநியோகம் செய்யப்படுவதால் இரவு வேளையில் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது.
புயல், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட பேரிடரின்போது பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் இணைக்கப்பட்டு இழப்பீடு பெற்றுக்கொடுத்தோம். இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீடு பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான். அதுமட்டுமின்றி, வறட்சி ஏற்பட்ட காலங்களில் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் 2,400 கோடி ரூபாய் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக அரசுதான். விவசாயிகளை கண்ணை இமை காப்பதுபோல காத்தோம். விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள், ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுத்தோம். உழவர் பாதுகாப்பு திட்டம் கொடுத்தோம், முதியோர் உதவி திட்டம் மூலம் லட்சக்கணக்கான முதியோருக்கு மாத உதவித்தொகை கொடுத்தோம். நாட்டிலேயே தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருது பெற்ற அரசாங்கம் அதிமுக அரசு.
இந்த தொகுதி எம்.எல்.ஏ பெரிய பணக்காரர், அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவர் எப்படி ஜெயித்தார் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். அவரது மருத்துவமனையில் கிட்னி அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதை ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்தது. அப்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தவறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அந்த மருத்துவமனையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு உரிமை ரத்துசெய்யப்பட்டது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் தவறு நடந்தது உறுதி செய்யப்பட்ட பிறகும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளை இதற்கு எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. உறுப்பை திருடுவது குற்றம். உறுப்பு திருடுவதைக் கூட இந்த அரசு விட்டுவைக்கவில்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சட்டத்தின் முன் சமம். எனவே உடனேயாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக பணம், நகை திருடுவார்கள். திமுக ஆட்சியில்தான் உடலிலுள்ள உறுப்புகளை எல்லாம் திருடுகிறார்கள்.
இப்போது இந்த தொகுதி மக்களுக்கு திமுக எம்.எல்.ஏ.வின் மருத்துவமனையில் இலவச சிகிச்சை அளிப்பதாகச் சொல்கிறார்கள். இதுவரை யாரெல்லாம் அவர்கள் மருத்துவமனைக்குப் போனீர்களோ, அவர்கள் எல்லாம் ஸ்கேன் செய்து, உடல் உறுப்பு பத்திரமாக இருக்குதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு பெண்ணுக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரலை எடுத்திருக்கிறார்கள். வறுமை என்பது கொடுமையானது அந்த கொடுமையை பயன்படுத்தி இப்படிப்பட்ட பணக்காரர்கள், பதவி வகிப்பவர்கள் ஏழைகளின் வயிற்றில் அடித்து உறுப்புகளை எடுப்பது குற்றம். நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறோம், நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இதுகுறித்து முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அந்த எம்.எல்.ஏ இப்போதும் அதிகமாகப் பேசுகிறார். அதாவது ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்க வேண்டுமென்றால் ஊர் மக்கள் கிட்னியை கழற்றினால்தான் வாங்க முடியும் என்று நக்கலாகப் பேசுகிறார். பணம் இருக்கும், போகும். ஆனால், உயிர் போனால் வராது. அப்படிப்பட்ட உயிரோடு விளையாடாதீங்க. இவரெல்லாம் எம்.எல்.ஏ என்று சொல்வதற்கே வெட்கக்கேடு. மக்களுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். கிட்னியைத் திருடுவதற்காகவா எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். மீண்டும் இந்த தொகுதியில் அவர் போட்டியிட்டால் அவரை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும், செய்வீர்களா.. செய்வீர்களா? தன்மானம் உள்ள மனிதராக நாம் இருக்க வேண்டும். நாட்டு மக்களைப் பற்றி கேவலமாகப் பேசும் ஒருவர் எம்.எல்.ஏ பதவியில் இருப்பதே அவலமான விஷயம்.
அதிமுக ஆட்சி மத்திய அரசோடு இணக்கமாக இருந்தோம். இன்றைய அரசு மத்திய அரசோடு மோதல் போக்கை கடைபிடிக்கிறது. மருத்துவத் துறை அமைச்சர் ஓடுவதற்கு தகுதியானவர், ஆனால் நிர்வாகம் செய்வதில் மோசமான நிலையில் இருக்கிறார். இங்கு காவிரி நீர் பாய்கிறது, இதனை மீட்டுக்கொடுத்த பெருமை அதிமுகவையே சேரும். 50 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலம் நீரைப் பெற்றுக் கொடுத்தோம். மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வரை சுத்தமாக இருக்க வேண்டும். அந்த குடிநீர் மாசுபடுகிறது. இரண்டு கரைகளில் இருந்தும் வெளியேறும் கழிவு நீர் கலக்கிறது. அதனால் காவிரி நீரை தூய்மைப்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் குறித்து பிரதமரிடம் தெரிவித்தோம். அவரும் குடியரசு தலைவர் உரையில் சேர்த்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக அரசு திட்டத்தைக் கைவிட்டுவிட்டது. சட்டமன்றத்தில் பேசியபோதும் செய்யவில்லை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம் அதன்மூலம் இத்திட்டத்துக்கு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பவானிசாகர், நொய்யல், அமராவதி உள்ளிட்ட கிளை ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் சுத்திகரித்து ஆற்றில் விடும் திட்டம் இது. எந்தெந்த விதத்தில் மக்களுக்கு உதவி செய்யமுடியுமோ அந்த விதங்களில் எல்லாம் உதவி செய்வோம். முதற்கட்டமாக 950 கோடி ரூபாய் ஒதுக்கினர், ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு பணம் ஒதுக்குவார்கள். இனி சுத்தமான நீர் உங்களுக்குக் கிடைக்கும்.
விவசாயிகளின் நன்மைக்கு உழவன் செயலி கொண்டுவந்தோம், விலைப்பட்டியல், சீதோஷ்ன நிலை, பூச்சிக்கொல்லி குறித்த தகவல்கள் எல்லாம் அதில் இருக்கும். கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் உப தொழில். இது சிறப்பாக நடக்கவும், இரட்டிப்பு வருமானம் கிடைக்கவும் அமெரிக்காவில் உள்ளது போன்று கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகளுக்கு கொடுக்க கால்நடைப் பூங்கா ஒன்று தலைவாசல் பகுதியில் 1000 கோடி ரூபாயில் அமைத்தோம், அதை திமுக அரசில் திறந்தாலும் கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஒரு நாளைக்கு ஒரு பசு 40 லிட்டர் பால் கொடுக்கும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதே ஆராய்ச்சி நிலையத்தில் கலப்பின ஆடுகள் 40 கிலோ எடை கொண்டதாக இருக்கும். எடை விலை கூடுதலாக இருக்கும்.
இப்படி அடிப்படை தேவைகளை உணர்ந்து கொண்டுவந்த அரசு அதிமுக அரசு. திமுக விவசாயிகள் விரோத அரசு. அதனால் தான் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை ரத்து செய்துவிட்டனர். ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தகம், புத்தகப்பை, சைக்கிள், விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் ரூ.7300 கோடி நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. அதையும் திராவிட மாடல் அரசு நிறுத்திவிட்டது. திமுக அரசால் நிறுத்தப்பட்ட இத்திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும். கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். திமுக அரசு ஏழைகளுக்கான சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து அதனை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும்.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகளை ஸ்டாலின் வெளியிட்டார். அவற்றில் 10% கூட நிறைவேற்றவில்லை, ஆனால் 98% நிறைவேற்றப்பட்டுவிட்டதாக ஸ்டாலினும், அமைச்சர்களும் பச்சை பொய் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளில் சிலவற்றைச் சொல்கிறேன். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்றார், சம்பளம் உயர்த்தப்படும் என்றார், ஆனால் செய்யவில்லை. இப்போது 100 நாள் வேலைத்திட்டம் 50 நாளாக சுருங்கிவிட்டது. தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் போராடி வாதாடி, முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தோம். ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் அதிமுக தான். கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்க, 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கினோம். அதன்மூலம் 2818 பேர் ஒரு ரூபாய் செலவில்லாமல் இலவசமாக மருத்துவம் படித்து இப்போது மருத்துவர் ஆகிவிட்டனர். திமுக அரசு ஏழைகளுக்காக இப்படி ஏதாவது ஒரு திட்டம் கொண்டுவந்தார்களா? எப்போது பார்த்தாலும் குடும்ப சிந்தனைதான் ஸ்டாலினுக்கு. ஆனால், அதிமுக எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திக்கும். கொரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றினோம். நோயைப் பற்றி எதுவுமே தெரியாமல் நல்ல முறையில் சிகிச்சை கொடுத்தோம். அச்சமயம் பிரதமர் மோடி எல்லா முதல்வர்களிடம் காணொளி காட்சி மூலம் பேசியபோது, தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுது, தமிழ்நாட்டைப் பின்பற்றுங்கள் என்று பாராட்டினார்.
கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம், 7 லட்சம் பேருக்கு மூன்று வேளை உணவு கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல்பாஸ் போட்டுக்கொடுத்தோம். தொழிலாளி, விவசாயி, மாணவர் ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிமுக ஆட்சியில் பலன் கிடைத்தது. இன்று ஒரே குடும்பம் தான் பிழைக்கிறது. அதிமுக குடும்ப கட்சி கிடையாது, வாரிசு அரசியல் கிடையாது. எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்திலும், ஒருவேளை கூட்டணிக் கட்சி போட்டியிட்டால் அவர்களது சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று ஆரவாரத்துடன் பேசினார்.