திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் - கரூர் பிரதான சாலையில் குழுமியிருந்த எராளமான மக்கள் மத்தியில் சிறப்புரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துவிட்டது. போதைப் பொருள் விற்பனை அமோகம். இந்த ஆட்சியால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் கேட்கவில்லை. ‘மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று இப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்கிறார்.
இதெல்லாம் எப்போது? எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்?. எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். நாங்கள் சொன்னதை அலட்சியப்படுத்தியதால் இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். போதை ஆசாமிகளால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர், போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருப்பதால்தான் போதைப் பொருட்களை தடுக்க முடியவில்லை. தமிழகத்தில் போதைப் பொருள் எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டியது எங்களது கடமை.
தொழில் துறை அமைச்சர், ஒரு வெள்ளை காகிதத்தைக் காட்டி இதுதான் வெள்ளை அறிக்கை என்கிறார். எவ்வளவு ஏத்தம் இருந்தால் இப்படிப் பேசுவார்?. நாட்டில் பல லட்சம் பேர் வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். கடந்த 52 மாத ஆட்சியில் 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும், 10.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டதாகவும், 32 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் 75% ஒப்பந்தங்கள் முடிந்துவிட்டதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னார். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே, டி.ஆர்.பி ராஜா அவர்களே… இதற்கு நீங்கள்தான் விளக்கம் கொடுக்க வேண்டும். 922 ஒப்பந்தங்கள் போடப்பட்டது என்று சொன்னால், அதில் 75% நிறைவேற்றப்பட்டது என்று சொன்னால் சுமார் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும்.
இத்தொகுதியில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? 32 லட்சத்தில் 75% என்றால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டுமே?. சொல்வது அத்தனையும் பொய். 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வந்ததாகச் சொன்னதற்கு வெள்ளை அறிக்கை கேட்டேன். தொழிலின் நிலை என்ன?. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று விளக்கம் கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார். டிஆர்பி ராஜா அவர்களே, உங்களுடைய ஆட்சி வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தைக் காட்டி நிரூபித்துவிட்டீர்கள். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். அங்கு ஒன்றுமே இல்லை. எனவே வெள்ளை காகிதத்தைத் தான் காட்டியாக வேண்டும்” என்று ஏகத்துக்கும் ஏகடியம் செய்தார் இபிஎஸ்.