தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. 

Advertisment

இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். 

Advertisment

அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தின்படி, நேற்று (08.10.2025) நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் குமாரப்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது த.வெ.க. கொடியை சிலர் உயர்த்திப்பிடித்தபடி இருந்தனர். இதனைப் பார்த்த எடப்பாடி பழனிசாமி, “முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே நீங்கள் கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவைதான். ஆனால் அதிமுக தலைமையிலே அமைக்கப்படுகின்ற கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும். 

இங்கே பாருங்கள் கொடி பறக்கிறது (என்று கூறியவுடன் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்). பிள்ளையார் சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி ஆரவாரம். முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே குமாரப்பாளையத்தில் நடைபெறுகின்ற கூட்டத்தினுடைய ஆரவாரம் உங்கள் செவியைத் துளைத்துக்கொண்டு செல்ல உள்ளது” எனப் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சு தமிழக அரசு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment