தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால்,சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இன்றைக்குப் பாரதிய ஜனதாவை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்கிறாரா? அப்படியென்று ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். எப்போது விமர்சனம் செய்ய வேண்டுமோ அப்போது நாங்கள் விமர்சிப்போம். ஆனால் அதிமுக ஆட்சி இருக்கின்ற வரை பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற போது எதைக் கேட்டோமோ அத்தனையும் கொடுத்தார்கள்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொடுக்கறதுனா சாதாரண விஷயமா?. உன்னால் ஒரு கல்லூரி வாங்க முடியலையே?. எப்போது பார்த்தாலும் திமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணி 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளோம் என்று கூறுகிறார். எதற்கு? அங்க போய்பெஞ்ச தேச்சிட்டு இருக்கிறார்கள்” எனப் பேசினார். பாஜகவோடு கூட்டணியில் இருந்தாலும், தேவை ஏற்பட்டால் மத்திய பாஜக அரசை விமர்சிப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது பாஜகவினர் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.