ஆகஸ்ட் 30 அன்று ஒரு முடிவோடுதான் அ.தி.மு.க.வின் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்தை தலைமைக் கழகத்தில் கூட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தலைமைக் கழகம் குறிப்பிட்ட 10 மணிக்குள் அரங்கினுள் தவறாமல் கூடியிருந்திருக்கிறார்கள். ஆனால் எடப்பாடியோ அந்தநேரம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்துகொண்டவர் அங்கு பா.ஜ.க.வின் மாஜி மாநில தலைவரிடம் அன்யோன்யமாகப் பேசி கலந்துவிட்டுத் தாமதமாக 11.30 மணியளவிலே கூட்டத்திற்கு வந்திருக்கிறார். இதுவே கூட்டத்திலிருந்தவர்களுக்கு அதிருப்தியாம். மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டத்தில் தன்னுடைய ஆளுமையை தீர்மானித்துவிட வேண்டுமென்பதே எடப்பாடியின் நோக்கம்.
ஆரம்பக்கட்ட சம்பிரதாயப் பேச்சுக்குப் பின்னர் ஜி.கே. மூப்பனாரின் நினைவேந்தல் பற்றித் தெரிவித்தவர், என்.டி.ஏ. கூட்டணிக்குத் தலைவர் எடப்பாடிதான். அவர் எடுப்பது தான் முடிவு. அவர்தான் முதலமைச்சர் என்று பா.ஜ.க.வின் மா.ஜி. மாநில தலைவரே சொல்லிவிட்டார். அதனால நம்ம கட்சிக்காரங்க நிர்வாகிகள், பொதுக்கூட்டம், பிரச்சாரம், பொதுவெளிகளில் அவரை தாக்கிப் பேசவேக் கூடாது என்று எடப்பாடி சொன்ன மறுகணம் வந்திருந்த மா.செ.க்களுக்கு அதிர்ச்சி. என்னய்யா இவரு. நிலையில்லாத ஆளா இருக்காரு. முன்னாடி அவரை இவர்தான் தாக்கிப் பேசினாரு. இப்ப நம்மள தாக்கிப் பேசக்கூடாதுன்றார். இதெல்லாம் சரிப்பட்டு வருமா. அரசியல்ல நம்பகத்தன்மை இருக்கணும் என்று முணுமுணுத்திருக்கிறார்கள்.
அதையடுத்து தொகுதி பற்றிய பேச்சை லேசாகக் கிளப்பிய எடப்பாடி தொகுதிகளப் பிரிக்கணும். இரண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. நியமித்தால் பணிகள் வேகமெடுக்கும் என்று சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு. ஐந்து மற்றும் ஆறு தொகுதிகளைக் கையில் வைத்திருக்கிற கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஆளுமையான மா.செ.க்களுமான வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தவர்கள். அப்படிச் செய்யக்கூடாது என்று ஓங்கிச் சொல்ல, ஏன் செய்யக்கூடாது என்று திருப்பிக் கேட்ட எடப்பாடியிடம், தொகுதிகளில் நாங்கதான் பூத் கமிட்டி அமைச்சிருக்கிறோம். அவங்களுக்கு புதுசாப் போடுற மா.செ.க்களைப் பத்தி தெரியாது. கட்டமைப்பு சிதறிரும் என்று எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதையடுத்து கூட்டத்திலிருந்த ஒட்டுமொத்த மா.செ.க்களும் பிரிவினை கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க சலசலப்பு கிளம்பியிருக்கிறது.
இதனால் நிலைகுலைந்து போன எடப்பாடி பின் சுதாரித்துக் கொண்டு, நீங்க இப்படிச் சொல்றீங்க. ஆனா இப்ப நா டூர் வந்ததுல 100 தொகுதிக்கு மேல பேசியிருக்கேன். மா.செ.க்களக் கூப்ட்டு கூட்டம் நடத்துங்கன்னு சொன்னா பணம் இல்லேன்றீங்க. ஆனா மா.செ.க்கள்ட்ட தொகுதிக்கு 30 லட்சம் நா கையிலருந்து கூட்டத்தச் சேக்கக்ச் சொல்லி கொடுத்திருக்கேன். நா ரூவா குடுத்து ஆட்கள கொண்டு வந்து உக்கார வச்சு இந்தக் கூட்டத்த நடத்துறதுல ஒரு பிரயோஜனமும் கெடையாது. என தன் பரப்புரைக்கு வந்த கூட்டத்தின் பின்னணி பற்றி ஒப்புதலளித்திருக்கிறார் எடப்பாடி. அதனாலதான் நான் மா.செ.க்கள மாத்தணும்றேன் நீங்க கூடாதுன்றீக. ரைட் இருக்கட்டும் என்று அடுத்த சப்ஜக்ட்க்கு மாறினார் எடப்பாடி.
அ.தி.மு.க.வின் தலைமைக் கழகப் பேச்சாளர்கள் 400 பேரில் 200 பேர் பிழைப்புக்கு வழியில்லாமல் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பாக்கெட்டில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படங்களைத்தான் வைத்திருப்பார்கள். மேலும் எடப்பாடியின் நிர்வாகத்தில் இந்தப் பேச்சாளர்கள் கண்டுகொள்ளப்படவில்லையாம். தவிர அவர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா படத்தை தங்களின் ஜோப்பில் வைத்திருப்பது எடப்பாடிக்கு உறுத்தலாக இருந்திருக்கிறதாம். காரணம் அவர்கள் எடப்பாடியின் படத்தை வைப்பதில்லை. அதன் காரணமாகவே மாணவர் அணியிலிருந்து 82 பையன்களை பேச்சாளர் ஆக்கியிருக்கிறார் எடப்பாடி. அவர்களுக்கு அண்ணா, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, போன்றோர்களைத் தெரியாது. பேசவும் தெரியாது. எடப்பாடியை மட்டும்தான் தெரியும். அவங்களப் பேச்சாளராப் போட்டா எடப்பாடி படத்த ஜோப்புல வப்பாங்கன்ற எண்ணத்துல பேச்சாளராக்கியிருக்கிறார் எடப்பாடி.
இதனால் கடும் கோபத்தில் இருக்கிற தலைமைக் கழகப் பேச்சாளர்கள் எப்பவேணாலும் போர்க்கொடியை ஒசத்தலாம் என்கிற எண்ணத்திலிருக்கிறார்கள். 2026 தேர்தல்ல அ.தி.மு.க. சரிவைச் சந்தித்தால் எடப்பாடி தலைமையை எதிர்த்து முதன் முதலில் தலைமைக் கழகப் பேச்சாளர்கள்தான் விவகாரத்தைக் கிளப்புவார்கள் என்ற பேச்சும் தலைமைக் கழகப் பேச்சாளர்களிடம் மையம் கொண்டிருக்கிறதாம். இதனிடையே மா.செ.க்களை உற்றுநோக்கிய எடப்பாடி, வயது முதிர்ந்த மா.செ.க்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கணும். கட்சிக்குப் புத்துயிரூட்ட கொஞ்ச வயசு ஆட்கள போடணும்ணு எடப்பாடி பேச, மேடையின் முன்பிருந்தவர்களுக்கு கடுப்பு. இவருக்கு 73 வயசாகியிருச்சி அதனால இவர்தான் இளைஞர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கணும்னு முணுமுணுத்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வின் ஆளுமை என்று சொல்லிக்கொள்கிற எடப்பாடியின் திட்டமும் நோக்கமும் மா.செ.க்களின் கூட்டத்தில் செல்லுபடியாகாமல் போனதால் அதிர்ச்சியிலிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.