தர்மபுரி  நகராட்சி அலுவலகம் அருகே மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்  தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடையே இ.பி.எஸ். இன்று (02.10.2025) பேசுகையில்,“கரூரில் தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிர் இழந்திருக்கிறார்கள். அவர்களுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்” என்றதும் அனைவரும் அமைதி காத்தனர். அதன் பிறகு பேசத் தொடங்கிய இபிஎஸ், ‘தர்மபுரியில் எழுச்சிப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. காரணம் உங்களுக்குத் தெரியும். கரூரில் செப்டம்பர் 27ம் நடந்த சம்பவத்தை நீங்களும் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியாளர்கள் உரிய முறையில் பாதுகாப்பு கொடுத்திருந்தால் அந்த உயிர்களை பாதுகாத்திருக்கலாம். 

Advertisment

முறையான, சரியான பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் யார்..? இது மக்கள் கேட்கும் கேள்வி. ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிகளுக்கு ஒரு நீதியா?. நாட்டு மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணி இதுக்கெல்லாம் பாதுகாப்புக் கொடுப்பது அரசின் கடமை. முதல்வரின் கையில்தான் காவல்துறை இருக்கிறது. சரியான முறையில் முதல்வர் உத்தரவிட்டிருந்தால், காவல்துறை சரியான முறையில் செயல்பட்டிருந்தால், பாதுகாப்புக் கொடுக்கப்பட்டிருந்தால், 41 உயிரை இழந்திருக்க வேண்டியதில்லை. இன்னும் ஆழமாகப் பேசமுடியும். ஆனால் இந்த அரசாங்கம் ஒரு நபர் கமிஷன் அமைத்துள்ளனர். விசாரணை தொடங்கிவிட்டது. அதனால் மேலோட்டமாகத்தான் பேச முடியும். இவ்வளவு பிரச்னை நடந்துவிட்டது. 

Advertisment

தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னார். ஆனால் இன்று தலைகுனிந்து நிற்கும் காட்சியைப் பார்க்கிறோம். நாடே அதிர்ந்துவிட்டது. இதுவரை எத்தனையோ அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது. எந்த ஒரு பொதுக்கூட்டத்திலும் இல்லாத அளவுக்கு 41 உயிர்கள் பறி போயிருக்கிறது என்று சொன்னால், இந்த அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சி உங்கள் கையில் இருக்கிறது. ஆட்சியாளர்களைத்தான் கேட்க முடியும். யார் யார் மீதோ பழி சுமத்தி தப்பிக்கக் கூடாது. ஒரு அரசு எப்படி செயல்பட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இனியாவது பொதுக்கூட்டத்துக்கு முறையான பாதுகாப்பு தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நான் 163 தொகுதியில் மக்களை சந்தித்தேன், 5 முதல் 6 மாவட்டத்தில் தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தனர், மற்ற இடங்களில் அதிமுக தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் தான் பாதுகாப்பு கொடுத்தனர். ஆளுங்கட்சி முதல்வர் கூட்டம் நடத்தினால் ஆளே இல்லாத பகுதியில் கூட காவலர்களை நிறுத்தி பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அதை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆளே இல்லாத இடத்தில் பாதுகாப்புக் கொடுக்கும் முதலமைச்சர், ஆயிரக்கணக்கான பேர் இருக்கும் இடத்தில் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை என்று மக்கள் கேட்கும் கேள்விக்கு முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும். இதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு மக்கள் 2026 தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள், உங்களுக்குத் தகுந்த பதிலடி வழங்குவார்கள். 

Advertisment

அதுமட்டுமல்ல, அரசு உயர் அதிகாரிகளை, செய்தியாளர்களை சந்தித்து இந்த ஆட்சியின் திட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று பணித்து, இந்த 10 நாட்களாக இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் என்று சொல்லிவருகிறார்கள். அது சொல்லலாம், ஆனால் கரூரில் நடந்த சம்பவத்தை எப்படி அரசு செயலாளர் சொல்ல முடியும்..? . ஒருநபர் கமிஷன் அமைத்துவிட்டு அரசு செயலாளர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். உங்கள் துறையின் பணிகளை மட்டும் நீங்கள் செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு அவர் எப்போது அங்கு சென்றார். இவர் ஏன் கையைக் காட்டவில்லை என்பதெல்லாம் உங்களுடைய பேச்சாக இருக்கக் கூடாது. இதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தோண்டியெடுத்து தவறான செயலில் ஈடுபடுகின்ற அதிகாரிகளை விடமாட்டேன். 

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?. மக்களின் வரிப்பணத்தில் தான் உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே, நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு மக்கள் துயரத்தை எண்ணி துடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய துயர சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுவது எந்த விதத்தில் சரி?. அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்ள என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அரசு அதிகாரிகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த ஆட்சியிலும், அதிகாரிகளிடமும் அது கிடைக்காது. 

சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி நடந்த சம்பவத்தை நியாயப்படுத்தி பேசுகிறார். நீங்க என்ன அரசியல்வாதியார்?. சட்டத்தைப் பாதுகாப்பது தான் உங்கள் பொறுப்பு. சரியான பாதுகாப்பு கொடுக்காததால் இத்தனை பேரை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம். கரூரில் ஒரு டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கிறது, அப்படியிருக்கும்போது ஏடிஜிபி செய்தியாளர்களிடம் நியாயப்படுத்தி பேசினார். கீழே இருக்கும் அதிகாரி எப்படி நியாயமாக விசாரிப்பார்..? இவை எல்லாமே நடந்த தவறை மறைப்பதற்கு அரசு நடத்தும் கண் துடைப்பு நாடகம்” எனப் பேசினார்.