அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பயணத்தில் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கந்தம்பாளையம், அந்தியூர் - பவானி பிரதான சாலையில் குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது, " இது விவசாயிகள் வாழும் பகுதி. எனக்குப் பரிட்சியமான தொகுதி. எனது அம்மா இந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் எனக்கு நிறையப் பேரைத் தெரியும், என்னுடைய ஊர் 20 கிலோமீட்டரில் இருக்கும் சிலுவம்பாளையம். எனவே, எப்போது வேண்டுமானாலும் வந்து என்னை எளிதாகச் சந்திக்கலாம். நானும் விவசாயி. உழைக்கும் வர்க்கம்.
இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது, மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். திமுக அதை ஷிஃப்ட் முறையில் மாற்றிவிட்டது. அதேபோல நம் விவசாயிகளுக்குக் கலப்பின பசுக்களை உருவாக்கிக் கொடுக்கலாம் என்று சேலம் தலைவாசலில் ஆயிரம் ஏக்கரில், ஆயிரம் கோடியில் பிரமாண்ட கால்நடை பூங்கா அமைத்தேன். இந்த ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சியில் கால்நடை பூங்கா இயங்கும். கலப்பின பசுக்களை விலையில்லாமல் கொடுப்போம். ஒரு நாளைக்கு 40 லிட்டர் பால் கொடுக்கும். 3 பசுக்களுக்குப் பதில் ஒரு பசுவே போதும். இந்த திட்டத்தை முடக்கிய விவசாய விரோத அரசு தேவையா?.
ஆயிரம் கோடி திட்டம் கிடப்பில் கிடக்கிறது. தமிழ்நாட்டில் என்.டி.ஏ.வுக்கும் திமுகவும் போட்டி என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார். இது தமிழகத்தில் யார் ஆட்சியில் இருக்கக்கூடாது என்பதை முடிவு செய்வதற்கான சட்டமன்றத் தேர்தல். முதல்வருக்கு அதுகூட தெரியவில்லை. இந்த ஆட்சி வறட்சி, புயல், கொரோனா எதையுமே சந்திக்கவில்லை. வருவாய் ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகக் கிடைத்திருக்கிறது. அப்படிக் கூடுதல் வருமானம் வந்தும் கடனை வாங்குகின்றனர். 5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். மக்கள் மீது கடன் சுமை சுமத்தியதுதான் சாதனை. கடனை நீங்கள்தான் கட்ட வேண்டும். கூடுதல் வரி போட்டுத் தான் கட்டவேண்டும். ஒருபக்கம் வருமானம் அதிகம், ஒருபக்கம் கடன் வாங்குகிறார். அப்படி என்ன திட்டம் கொடுத்தீர்கள்?.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/08/eps-back-speech-2026-03-08-15-09-51.jpg)
அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்தேன். ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைத்தது. இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரே ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்குத் திறமை வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர் நம்மை ஆள்கிறார். அதிமுக ஆட்சி மலர்ந்தவுடன் குடும்ப அட்டைக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மத்திய அரசு எங்களோடு இருக்கிறது தேவையான நிதியைப் பெறுவோம். உரிமைத் தொகை பற்றிப் பேசுகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின், இரண்டரை ஆண்டுகள் கழித்துத்தான் கொடுத்தார். நான் சட்டமன்றத்தில் பேசினேன்.
28 மாதமாகிவிட்டது, இன்னமும் கொடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை கொடுத்ததால், எங்கள் அழுத்தம் காரணமாகக் கொடுத்தார். பெண்களின் கஷ்டத்தைப் பார்த்துக் கொடுக்கவில்லை, பெண்கள் ஓட்டுத் தேவை என்பதற்காகவே கொடுக்கிறார். அதிமுக எடுத்த கடுமையான நடவடிக்கை காரணமாகத்தான் கொடுத்தார். அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளுமே சிறப்பாகச் செயல்பட்டது, அதன்மூலம் நூற்றுக்கணக்கான தேசிய விருதுகளைப் பெற்றது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர் கல்வித்துறை எனப் பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு.
திமுக அரசில் எல்லா துறைகளிலும் ஊழல். நகர்ப்புற வளர்ச்சித் துறையில் ஊழலை அமலாக்கத்துறை ஆதாரத்தோடு கண்டுபிடித்து 3 முறை எஃப்.ஐ.ஆர் போடச்சொல்லி கடிதம் அனுப்பியது. அதிமுக வழக்குப்போட்டது, இன்னும் 2 வாரத்தில் ரிசல்ட் தெரிந்துவிடும். அமைச்சர் இங்கே இருப்பாரா அல்லது உள்ளே இருப்பாரா என்று பார்க்கலாம். அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றினோம், இன்னும் பல திட்டம் கொடுப்போம். அந்தியூர் எனக்கு முழுமையாகத் தெரிந்த பகுதி. என்னென்ன தேவையோ செய்துகொடுப்போம்” என்றார்.
Follow Us