தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணச்சநல்லூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (24.08.2025) பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “திமுகவை பொறுத்தவரைக்கும் கலைஞர் குடும்பத்தில் இருக்கின்றவர்களுக்குத் தான் கட்சியிலும் பதவி, ஆட்சியிலும் பதவி. வேறு யாருக்கும் விட்டுத்தர மாட்டார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் திமுக தலைவர். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர். கனிமொழி மகளிர் அணிச் செயலாளர். அவ்வளவுதான் கட்சியிl பதவி உள்ளது. வேற என்ன பதவி இருக்கிறது? ஒவ்வொரு பதவியும் குடும்பத்திற்குள் பகிர்ந்துகொண்டனர். திமுக என்பது குடும்ப கட்சி. வாரிசு அரசியலுக்குத் தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கிற தேர்தல் 2026 சட்டமன்றத் தேர்தல் ஆகும்.
இந்தப் பகுதி (மணச்சநல்லூர்) ஏழைத் தொழிலாளர்கள் நிறைந்த விவசாய, தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக உள்ள பகுதி ஆகும். மக்கள் குடிசையில் வாழ்ந்தாலும் சரி, வீடு இல்லாது இருந்தாலும் சரி அவர்களுக்கு பல லட்சம் மதிப்பில் அற்புதமான கான்கிரீட் வீடு அதிமுக ஆட்சியில் கட்டித் தரப்படும். இப்போது வீடு கட்டித் தருவது மாதிரி இல்லாமல் தரமான வீடு கட்டித் தரப்படும். ஏழைகள் மகிழ்ச்சி பொங்க மனம் நிறைவு பெறுகிற அளவுக்கு பல லட்சம் மதிப்புள்ள கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
அதேபோல ஒவ்வொரு தீபாவளி அன்றும் தாய்மார்களுக்கும் சசோதரிகளுக்கும் அற்புதமான சேலைகள் கொடுக்கப்படும். இது அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகளில் ஒன்று ஆகும். அதிமுக தான் மக்களுக்காக பாடுபடக்கூடிய கட்சி. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து நாட்டிலேயே தமிழகம் முதலிடம் என்ற பெருமையைப் பெறுவதற்கு அடித்தளமிட்ட அரசாங்கம் ஆகும்” எனப் பேசினார்.