ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் நவம்பர் மாதம் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள் - I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை (Website: http://www.trb.tn.gov.in) நேற்று (11.08.2025) வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நவம்பர் 1,2 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ளது.
கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. உலகத்தில் எந்த நாட்டில் இருந்தாலும், கிறிஸ்தவப் பெருமக்கள், மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களை அவர்தம் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்கு செல்ல இயலாது. ஒரு சரியான நிர்வாகம் உள்ள அரசு இதையெல்லாம் கருத்திற்கொண்டிருக்கும். ஆனால், நடப்பதோ ஸ்டாலின் மாடல் ஆட்சியல்லவா?. முதல்வரைப் போலவே, மக்கள் உணர்வுகள் அறியாமல் அலட்சியமாக செயல்படும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.