சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்திற்குள் 3 இருசக்கர வாகனங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த மக்கள் மீது அரிவாள் மற்றும் பட்டாக்கத்திகளால் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த 9 பேர் காயமடைந்தனர். ஒருவரைத் தாக்கும் நோக்கில் வந்த கும்பல், வழியில் தடுத்தவர்களையும் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக முத்தனேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதம், இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக அமைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் சாதிப் பெயரைக் கேட்டு தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் நடத்திய கும்பல் பைக்கில் வந்து அரிவாளுடன் இறங்கித் தாக்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் இத்தாக்குதல் குறித்துத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். அதாவது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறி இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இருசக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக்கத்திகளுடன் வந்த ஒன்பது மர்மநபர்கள், கண்ணால் கண்டவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/siren-police-2026-03-05-14-41-54.jpg)
இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்துள்ளது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதேபோன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதலமைச்சர், பொம்மை முதல்வராக இருக்கிறார் என்பது தானே?. திமுக அரசின் குற்றவாளிகள் கைது நடவடிக்கையைக் கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் சமூக அநீதி திமுகஅரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா? முடிந்துவிட்டது என தான் காட்டிய சைகை வைரல் ஆனதாக வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார். ஆமாம் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே.... உங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முடிந்துவிட்டது. பெண்கள் பாதுகாப்பு முடிந்துவிட்டது. சமூகநீதி முடிந்துவிட்டது. மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்துவிட்டது. இப்படி முடிந்துவிட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுவதே.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/05/cm-mks-sad-2026-03-05-14-42-19.jpg)
அதை மிக விரைவில் தமிழக மக்கள் சிறப்பாக செய்ய காத்திருக்கிறார்கள். இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us