கோவை விமான நிலையம் அருகே, பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2ஆம் தேதி (02.11.2025) இரவு ஆண் நண்பருடன் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியே வந்த 3 இளைஞர்கள், ஆண் நண்பரைக் கடுமையாகத் தாக்கி, அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காலியிடத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். அதே சமயம் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  

Advertisment

மேலும், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் பீளமேடு போலீசார், தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குணா (30), சதீஷ் (20) மற்றும் கார்த்திக் (21) ஆகிய மூவரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இத்தகைய  சூழலில் தான் கோவை மாவட்டம் இருகூரில் சாலையில் நடந்து சென்ற இளம்பெண் காரில் கடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்தகவல் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. 

Advertisment

இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துப் பேசுகையில், “வெள்ளை நிற காரில் ஒரு பெண் சத்தமிட்டுக் கொண்டு செல்வதாக, பெண் ஒருவர் (ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர்) காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மைய எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.  உடனே சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தனர். அதற்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் வகையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சூலூர் பகுதியில் இருந்து ஏஜி புதூர் பகுதிக்கு வந்துள்ளனர். 

cbe-women-ins-city-comissoren-sarabana-sundra

எனவே ஏஜி புதூரில் உள்ள பேக்கரியின் சிசிடிவி காட்சிகள் உள்ளன. அதில் வண்டியின் நம்பர் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதோடு  காரில் பெண் இருந்தது தொடர்பாக அந்த பதிவில் தெரியவில்லை. இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக காவல்துறையின் அவசரக் கால கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் மட்டுமே வந்துள்ளது. அதில் காரில் ஒரு பெண்ணின் சத்தம் கேட்டது என்று மட்டும் தான் தகவல் இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறைக்கு எவ்விதமான புகாரும் இதுவரைக்கும் வரவில்லை. இருந்தாலும் கூட சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் இடத்திற்குப் பின்னால், முன்னால் இருக்கக் கூடிய சிசிடிவி காட்சிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். காரின் எண் இன்னும் கண்டறியப்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார்

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் காரில் கடத்தப்படுவது போன்ற சிசிடிவி காட்சிகள் செய்திகளில் வந்துள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளை பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக சமரசம் (Compromise) செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வந்த மூன்றாவது நாளே, அதே கோவையில், பெண் கடத்தப்படும் சிசிடிவி காட்சி வெளிவருவது, திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கொஞ்சம் கூட சட்டத்தின் மீதோ, காவல்துறை நடவடிக்கை மீதோ அச்சமே இல்லை என்பதையே காட்டுகிறது.

cm-mks-sad

எந்த நேரத்திலும், எங்கும் பெண்களால் நிம்மதியாக, பாதுகாப்பாக இருக்க முடியாத ஒரு பதற்றமான நிலையை உருவாக்கிவிட்டு, இந்த அரசை "பெண்களுக்கான அரசு" என்று கூறுவதற்கு  முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று உங்கள் பெயருக்கு பின்னால் வைத்துள்ள நீங்கள், தமிழ்நாட்டின் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டாமா?. மேற்கூறிய சம்பவங்கள் குறித்து உரிய விசாரணையை துரிதப்படுத்தி, பெண்களைக் கண்டுபிடித்து, குற்றவாளிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருவித்துள்ளார்.