தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலுவாக இடம் பெற்றுள்ளன.
மறுபுறம், பிரிந்து கிடந்த அதிமுக - பா.ஜ.க கூட்டணி 2026ஆம் தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மீண்டும் சேர்ந்திருக்கிறது. இந்த கூட்டணி அறிவித்ததில் இருந்து கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சாபில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது தொடர்பாக தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அமித்ஷா, “அதிமுகவில் யாரையும் ஒன்றிணைக்கும் விஷயங்களில் பாஜக ஈடுபடவில்லை. அது அவர்களுடைய கட்சி குறித்த விஷயம். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பேசி முடிவெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் அதிமுகவில் இருந்து முதல்வர் வேட்பாளர் வருவார் என்றும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா பேசியிருந்த நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா நேற்று (29-06-25) நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்கின்ற நோக்கமே, வாக்குகள் சிதறாமல் நமக்கு வேட்பாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான். திமுக இந்த தீய சக்தி மக்கள் அரசை அகற்றப்பட வேண்டும் என்பதற்காக நாம் கூட்டணி வைக்கின்றோம். எடப்பாடி பழனிசாமி பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துவிட்டார், பா.ஜ.க அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என்று சொல்கிறார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. அதிமுக சுமார் 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சி. எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது. 2026இல் நடைபெறுகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும்” என்று பேசினார்.