மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 3 நாள் பிரசாரம் செய்வதற்காக நேற்று (23.08.2025) மாலை திருச்சி வந்தார். அந்த வகையில் திருச்சி அடுத்த திருவெறும்பூரில் நேற்று மாலை நடந்த பிரசாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில் பாஜ கூட்டணி பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அதை தொடர்ந்து திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார்.
அதில், “திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவை பெற்று, அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அதிமுக போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளர் போட்டியிட்டால் அவர்களின் சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.
முன்னதாக நெல்லையில் நடந்த பாஜ பூத் கமிட்டி மாநாட்டில் பாஜக - அதிமுக இணைந்த தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் பேசிய நிலையில், அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.